திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மர்ம மனிதன் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் வெட்டப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். இறக்கக்கண்டி, வாழையூற்று பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய கந்தையா அருமைநாயகம் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வெட்டப்பட்டுள்ளார். இவர் வெங்காய செய்கையில் ஈடுபட்டு வருபவர் எனவும், மாடு துரத்துவதற்காக வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், நிலாவெளி, இக்பால் நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய அருளானந்தம் அரவிந்த என்ற இளைஞர் 10ஆம் கட்டை பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இவர்கள் இருவரும் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, திருகோணமலை மூதூர் அக்கறைச்சேனை பகுதியில் கிறீஸ் மர்ம மனிதன் பெண்களுடன் சேட்டைவிட்டுக் கொண்டிருந்தவேளை அப்பகுதி இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டான். இச்சுற்றிவளைப்பின்போது மூவர் தப்பி ஓடுவதை அவதானித்த இளைஞர் குழு பின்தொடர்ந்து சென்றவேளை அம்மர்ம மனிதர்கள் கரையோர கிராமமான ஹபீப் நகர் பகுதியில் அமைந்துள்ள கடற்படையினரின் காவலரணிற்குள் புகுந்துள்ளனர்.
பின்னர் மர்ம மனிதரை தம்மிடம் ஒப்படைக்கக்கோரி பிரதேச மக்கள் காவலரனை முற்றுகையிட்டிருந்த நிலையில் இராணுவத்தினர் மர்ம மனிதர்களை இராணுவ கவச வாகனத்தில் அழைத்துச்சென்றனர். இதனைத் தொடர்ந்து ஆத்திரமுற்ற பொது மக்கள், காவலரனை நோக்கி கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டனர். தற்போது, கடற்படையினரின் காவலரணுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நன்றி: தமிழ் சீ.என்.என்.






0 comments:
கருத்துரையிடுக