அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இன்று கிண்ணஸ் உலக சாதனையொன்று நிலைநாட்டப்பட்டது

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கண்டனப் பேரணி

கிழக்கு மாகாணத்தில்‌ கிறீஸ் மனிதனைக் கண்டித்து வீதியில் இறங்கிப் போராட்டம் நடாத்தும் பெண்கள்

கிழக்கு மாகாணசபையால் நடாத்தப்படும் நடுக்கடலுக்குள் சொகுசுப் பயணம் East Expo-2011

கவனிப்பாரற்ற நிலையில் வாழும் யாழ்ப்பாணம் மத்ரஷா வாழ் அகதிமுகாம் மக்கள்

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல்; 5 பொலிஸார் பலி, 5 பொதுமக்கள் காயம்


புத்தளத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகவும்,  அதன் காரணமாக அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்ற போது மர்ம மனிதர் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதேச மக்கள் நடத்திய தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் நடத்திய தாக்குதல்களில் கிராம மக்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் பிரதேச மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.


புத்தளத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து பிரதேசத்தில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிறு இரவு இடம்பெற்ற சம்பவங்களில் பொலிஸ்ஸார் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் செய்தியாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சம்பவங்களில் காயமடைந்த பெண்ணொருவரும் 13 வயது பிள்ளையொன்றும் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் கிறீஸ் பூதம் என்ற மர்ம மனிதர்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டதாக பரவிய பீதியே இந்த மோதலுக்கும் பதற்றத்துக்கும் காரணமாகியுள்ளது.

பின்னிணைப்பு: நிலைமை மேலும் மோசமடைவதை கட்டுப்படுத்துவதற்காக, புத்தளம் பெரிய பள்ளிவாசலினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் அமைதி காக்குமாறும் அனைவரும் இப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பள்ளிவாசலுக்கு வருகை தருமாறும் அழைப்புவிடுக்கப்பட்டது. 


பள்ளிவாசலில் புத்தளம் பள்ளிவாசல் சபை உறுப்பினர்கள் மற்றும் புத்தளம் நகர பிதா உட்பட அரசியல் மற்றும் சமூகப் பெரியார்கள் கலந்து கொண்டதுடன், ஆத்திரமுற்றிருந்த பொதுமக்களை கட்டுப்படுத்தி ஆறுதல்கள் கூறியதுடன் மேலும் எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடினர். 


இவ்வேளை பெரிய பள்ளிவாசலின் அழைப்பிற்கு இணங்க உடனடியாக விஜயம் செய்த வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரிகேட் கொமாண்டர் திரு கமகேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பெறப்பட்ட முடிவுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டன. 


இதன்படி, உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் முகாம்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன், நகரத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதுடன் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை எவ்வித தடங்கலுமின்றி மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல்



கொழும்பு, புதுக்கடை பகுதிக்குள் மர்மமனிதர்கள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பும் பதற்றமும் எற்பட்டது. மர்மமனிதர்கள் இருவரை தாம் கண்டதாக சிலர் தெரிவித்ததையடுத்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது. தகவல் வெளியானதையடுத்து புதுக்கடை பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் மர்ம மனிதர்களை பிடிப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

பொல்லுகள், தடிகள், கற்களை ஏந்தியவாறு மக்கள் மர்ம மனிதர்களை தேடினர். இவ்விடயம் குறித்து பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து படையினரும் பொலிஸாரும் அப்பகுதிக்கு வந்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர். ஆனாலும் எவரும் கைதுசெய்யப்படவில்லை. நேற்று அதிகாலை 2மணியளவில் மர்மமனிதர்கள் இருவரை கண்டதாகவும் இவர்கள் வீடுகளின் கூரை மீது ஏறி தப்பியோடியதாகவும், புதுக்கடை வாசியொருவர் தெரிவித்துள்ளார். கறுப்பு நிற காற்சடைடையும் அதேநிறத்திலான ரீசேட்டும் அணிந்திருந்த இருவரே இவ்வாறு புதுக்கடை பகுதிக்குள் ஊடுருவியதாக நேரில் கண்டவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் கொழும்பிலும் சில பகுதிகளில் மர்ம மனிதர்களின் ஊடுருவல்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. ஆனாலும் இத்தகைய மர்ம மனிதர்கள் எவரும் இல்லையெனவும் இவை வெறும் கட்டுக்கதை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

பூதங்களுக்கு சிகிச்சை வேண்டாம்


இலங்கையில் பரவலாக பேசப்படும் விடயங்களில் ஒன்றான கிரிஸ் பூதங்கள் கிராமப் புறத்தையே அதிகமாக இலக்கு வைத்து தாக்குகின்றது. பாலியல் சேஷ்டைகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படும் ‘கிறீஸ் பூதங்களுக்கு வைத்திய சிகிச்சையளிக்க வேண்டாமென வைத்தியர்களை பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


‘மர்ம மனிதர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டாமென்று பொதுமக்கள் வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ள பல சம்பவங்கள் குறித்து எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது’ என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர் உபுல் குணசேகர தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் அக்ககரைப்பற்று வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வாகனமொன்று கிறீஸ் மனிதர் ஒருவரை ஏற்றிச்செல்வதாக கூறி ஒரு குழுவினர் அவ்வாகனத்தை தாக்கியதாகதாகவும் டாக்டர் குணசேகர கூறினார்.

சனி, 20 ஆகஸ்ட், 2011

மர்ம மனிதன் வாக்குமூலம்


அரசாங்கமே தங்களை இங்கு அனுப்பியதாகவும் தான் இலங்கை அரசாங்க பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவன் என்றும் மட்டக்களப்பு மாவடிவேம்பில் மக்களிடம் பிடிபட்ட மர்ம நபர் ஒருவர் பொது மக்களின் சித்திரவதை தாங்கடியாமல் உண்மையைக் கக்கியுள்ளமை தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்திவரும் மர்ம மனிதர்கள் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அண்மையில் மட்டக்களப்பு மாவடிவேம்பில் பிடிபட்ட மர்ம மனிதன் ஒருவன் பொதுமக்களின் சித்திரவதை தாங்கடியாமல் இந்த உண்மையை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த புதன்கிழமை (10.08.2011) காலை மட்டக்களப்பு மாவடிவேம்பு பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட மர்ம மனிதன் அல்லது கிறீஸ் மனிதன் என்று அழைக்கப்படும் நபரை பொதுமக்கள் கட்டிவைத்து சித்திரவதை செய்தபோது "நான் இலங்கை அரச படைப்பிரிவைச் சேர்ந்தவன் என்னை அடிக்கவேண்டாம்" என கையெடுத்து கும்பிட்டு ஒரு அடையாள அட்டையொன்றை காட்டியதாக தெரியவந்திருக்கின்றது.

இதன் பின்னர் சற்று நேரத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் குறித்த மர்ம மனிதனை தாங்கள் பொலீசாரிடம் ஒப்படைப்பதாக கூறி கூட்டிச்சென்றதாகவும் ஆனால் இதுவரை அந்த மனிதன் பற்றியோ அந்தச் சம்பவம் பற்றியோ இலங்கை பொலீசார் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லையென இப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

கிறீஸ் மனிதன் உண்மையா?


எஸ். எல். மன்சூர்

கடந்த சில வாரங்களாக இலங்கையின் மலையகம், கிழக்கு பிரதேசங்களில் அங்குவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையினை கதிகலங்கச் செய்துள்ள மர்மம் நிறைந்ததாகக் கூறப்படுகின்ற கிறீஸ்மேன் எனப்படும் கிறீஸ் மனிதனது நடவடிக்கைகள் புதிராத புதிராகவே காணப்படுகிறது. பல்வேறு கட்டுக்கதைகளுடன் உலவாரும் இம்மனிதர்களது நடவடிக்கைகளைப் பார்க்கின்றபோது பின்புலத்தில் பாரிய சதித்திட்டங்களுடன் நாட்டின் மீண்டும்மோர் பிரச்சினையை கிளப்பி அதில் குளிர்காய நினைக்கும் சதிகாரர்களின் செயற்பாடாக இருக்குமோ? எனவும் மக்களை எண்ணத்தோன்றியுள்ளது. அதேவேளை நாட்டின் இதர பகுதிகளில் இல்லாத அதேவேளை மேற்படிபிராந்தியங்களில் குறிப்பாக பெண்களை மாத்திரம் இம்சைப்;படுத்துகின்ற அல்லது துவம்சம் செய்ய நினைக்கின்ற இம்மனிதர்கள் ஏன் ஆண்களை துவம்சம் செய்வதற்கு நிணைக்காமையானது இன்னும் வேறுபல ஊகங்களையும், சந்தேசகங்களையும் மக்கள் மனதில் கிளப்பிவிட்டுள்ளது.


உண்மையில் ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் இறக்காமம் பிரததேசத்தில் இரவு நேரங்களில் பெண்களின் மார்பு, கைகளை பிடிக்கின்ற ஒரு குழு அல்லது ஒரு தனிமனிதன் உலாவுவதாக கதை பரப்பப்பட்டு பின்னர் கையுமெய்யுமாக பிடித்தது, அதன் பின்னர் அங்குள்ள பொலிசாரின் காவல் நிலையத்தின் காப்பரண்கள் பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அம்பாறையின் கிராமங்கள் அனைத்தும் பின்னர் படிப்படியாக தோற்றம் பெற்றுவந்த இந்த கிறீஸ் மனிதனது கதை வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேசத்தில் பாரிய மக்களது ஆர்ப்பாட்டதில் போய் முடிவுற்றபோது அங்கே பொலிசாரும் பொதுமக்களும் மோதவேண்டிய நிலை ஏற்பட்டது. உண்மையில் நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு மார்க்கமாக காணப்படும் பொலிசாரின் நடவடிக்கைகள் மக்களின் மனதில் பாரிய வடுவினை ஏற்படுத்துகின்ற நிலைமையில் இந்த அதிரடியான நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்வதானது நாட்டில் மீண்டும் இயல்புநிலைக்கு மாற்றமான தோற்றப்பாட்டை யாராவது பின்புலத்திலிருந்து தோற்றுவிக்கின்றனரா? அல்லது உண்மையாகவே மர்மம் நிறைந்த கிறீஸ் மனிதன்தானா? என்பது புரியாத புதிராகவே காணப்படுகிறது.

அதேவேளை இவ்வாறான கிறீஸ் மனிதன் எனச் சந்தேகிக்கப்படும் மனிதர்களை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கின்றபோது அவர்களை விடுவிக்கின்ற பொலிசாரின் செயற்பாடுகளே பொலிசாருக்கும் பொதுமக்களினதும் முறுகளுக்கு காரணம் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் வாழைச்சேனைப் மற்றும் பொத்துவில் பகுதிகளில் இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக நடைபெற்ற சம்பவங்கள் மிகவும் பாரியளவிலானதாக தோற்றம் பெற்றாலும் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கின்ற நிலைமை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்துவதற்கு கால் கோலாய் அமையும் என்பதாகவும் கூறப்படுகின்றது. 


பதுளை, ராகலை, ஹட்டன் பிரதேசங்களில் சந்தேகத்தின் பேரில் பலர் கைதாகியுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் அங்கே கிறீஸ் பூதம்(கிறீஸ் யக்கா) என்கிறபேரில் உலாவுகின்ற குழுவொன்றையும் அதிரடிப்படையினர் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இம்மனிதர்களது செயற்பாடுகள் பற்றி பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன் ஹ_லுகல்ல தெரிவிக்கையில் “இதில் எவ்வித உண்மையும் இல்லை” என்றும், பொலிஸ்மா அதிபர் “இம்மர்ம மனிதர்களது நடமாட்டத்தை விசாரிக்க தாம் தயாராக இருப்பதாகவும்” செய்திகள் தெரிவிக்கின்ற அதேவேளை அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இராணுவத்தினர் கடந்த ஒரு சில நாட்களாக இரவு பகல் என்று பாராது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது. 

குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தில் இம்மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் பிள்ளை ஒன்று தற்போது கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான நடவடிக்கைகளை பொலிசார் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என்பதற்காகவே பொலிசார் மீது பொதுமக்கள் மீதான தாக்குதலை மேற்கொண்டனர் எனவும் கூறப்படுகின்றது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களும், அமைச்சர் பௌசி, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா போன்றோரும் நிலைமையை நேரில் அவதானிக்கச் சென்று மக்களை அமைதிப்படுத்தியும் உள்ளனர்.


தற்போது முஸ்லீம்களின் புனித நோன்பு காலம். இக்காலங்களில் இரவுநேரத்தில் பள்ளிகளில் அதிகளவு தொழுகை போன்ற சமயச் செயற்பாடுகளில் ஈடுபடுவது வழக்கம். மர்ம மனிதர்களின் நடமாட்டம், ஊரடங்குச் சட்டம் போன்றவற்றினால் கலவரம் அடைந்துள்ள மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தம் விளைவிக்கின்ற நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே கூடாது. அதேவேளை பொதுமக்கள் சட்டத்தைக் கையிலெடுப்பதும் பிழையான தோற்றத்தை ஏற்படுத்தும். அதேநேரம் இவ்வாறாக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்தமை, சரியான விசாரணை மேற்கொள்ளாமை போன்றனவும் பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியதன் எதிரொலியே பாரியளவிலான விரிசலுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறனவர்களின் நடமாட்டம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் செயலாளருமான ஸ்ரீரங்கா அவர்கள் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் இம் மர்ம மனிதர்கள் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் வேண்டுமென்றே மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான வதந்திகளை பரப்புபவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரகால சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பங்களின் உண்மையான சூத்திரதாரிகளை இதனூடாக கைது செய்ய முடியாமை அவசரகால சட்ட அமுலாக்கம் அர்த்தமற்றது எனவும் கூறியுள்ளார்.


மக்கள் வியாபார நோக்குடன் பிரதேசங்களுக்குள் செல்வதும் வருவதுமாக இருந்த நிலையில் இன்று எப்பிரதேசத்திற்குச் சென்றாலும் மக்கள் பார்வை வித்தியாசமாகவே காணப்படுகிறது. கிறீஸ் மனிதன் குறிப்பாக பெண்கள் தனிமையில் இருக்கின்றபோது அல்லது தனிமையாக செல்லும் போது அவர்களது கைகளில், நெஞ்சில் கத்தியினால் கீறிவிட்டு இரத்தத்தை பஞ்சித் துண்டில் தொட்டுக் கொள்வது எனவும் பொதுமக்களிடையே கதை உலாவுகின்றது. கடந்த 8ஆந்தகதி சம்மாந்துறையில் இரவு 8 மணியளவில் கோரக் கோவில் பிரதேசத்துப் பெண் ஒருவர் குளிக்கின்றபோது அப்பெண்மீது ஒரு மனிதன் சேஷ்டையில் ஈடுபட்டதாகவும் அப்பெண் கூக்குரலிட்டபோது அம்மனிதன் பொலிஸ் நிலையத்திற்குள் சென்;றதாகவும் இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து சப்தமிட்டு கோஷம் எழுப்பினர். அங்குபொலிசார் பொதுமக்களை அகன்று செல்லுமாறு பணித்தபோது பொலிசார் மீது கல்லெறி வீசப்பட்டதாகவும், இதனைத் தடுக்கவே கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி கலகத்தை அடக்க முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


இதுபோன்ற சம்பவங்கள் இப்பிராந்தியத்தில் பல இடங்களில் ஏற்படுள்ள நிலையில் பொதுமக்களின் விசனம் காரணமாகவே பொலிசார் பொதுமக்கள் மீதான வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது வீதிமுழுவதும் இராணுவ மயமாக காட்சி தரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அனாமோதய துண்டுப் பிரசுரங்களும் வீசப்பட்டு, உடனடியான ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், நோன்பு காலம் என்பதனால் இராணுவத்தினரின் வீதி உலா நடவடிக்கைகளினால் கடையடைப்புக்களோ ஆர்ப்பாட்டங்களே இடம்பெறவில்லை. பொத்துவில், வாழைச்சேனை, சம்மாந்துறை, இறக்காமம், மலையகம் உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் மக்களின் உள்ளத்தை கிலி கொள்ளச் செய்த மர்ம மனிதன் பற்றிய புதிர் புரியாத புதிராகவே இருக்கப் போகின்றதா? அல்லது இவ்விடயத்தில் அரசியல் பின்னணி கலந்துள்ளதா? இதனைச் செய்பவர்கள் யார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார், பெண்களின் இரத்தத்தை மாத்திரம் பெறவேண்டியதன் மர்மம்தான் என்ன? இதுபோன்ற வினாக்களுக்கு விடைகாண்து பொதுமக்களா? பொலிசாரா?; இம்மர்ம மனிதன் உண்மையான கிறீஸ் மனிதனா? அல்லது இயல்பு வாழ்க்கையினை குழப்ப எத்தனிப்பவர்களின் கைவரிசையா? என்பது இன்னும் புதிராகவே தெரிகிறது.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

காரைதீவு மர்ம மனிதன் தாக்குதல்


மட்டக்களப்பு காரைதீவு பிரதேசத்தில் மர்ம மனிதர் ஒருவருடன் குடும்பஸ்தர் ஒருவர் நேரடியாக மோதலில் ஈடுபட்டவேளை மர்மனிதனின் வெட்டுக்கீறல் காயங்களுடன் அதே இடத்தைச் சோ்ந்த 54 வயதுடைய விநாயகமூர்த்தி இராசலிங்கம் என்பவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.


இதன்போது மர்மமனிதர் அவரது வீட்டு வெளிமதில் சுவரோடு சாய்ந்து ஒளித்திருந்துள்ளார். தாக்குதலுக்குள்ளானர் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளார். அவரை கடந்த 5 தினங்களாக இரவில் கண்விழித்து ஊர்ப்பாதுகாப்பில் ஈடுபட்டுவரும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு காரைதீவுப் பிரதேசசபைக்கு தெரிவான உறுப்பினர் யோ.கோபிகாந் சென்று பார்வையிட்டு நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார்.

திங்கட்கிழமை இரவு 9.00 மணியளவிலேயே இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
இந்நபர் டோர்ச் லைட் உதவியுடன் கடைக்குச் செல்லும் வழியில் வீதியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் மதிலருகில் நின்று கொண்டிருந்தார். அவரை நீ யார் என கேட்டபோது, அச் சந்தேக நபர் பதில் எதனையும் கூறாது கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.


இச்சம்பவத்தினால் வெட்டுக்கீறல் காயங்களுக்கு உள்ளான குடும்பஸ்தர் கூச்சல் இடவே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அத்துடன் காரைதீவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர் யோ.கோபிகாந், மனித உரிமை செயற்பாட்டாளர் பி. ஸ்ரீகாந் ஆகியோர் ஸ்தலத்திற்கு விரைந்து வந்ததுடன் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த பிரஸ்தாப நபரை காரைதீவு வைத்தியசாலைக்குக் கொண்டுசென்று அனுமதித்தனர். இச்சம்பவத்தைக் கேள்வியுற்றதும் கம்பு, தடிகளுடன் ஊர்மக்கள் திரண்டனர். சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரியும் ஸ்தலத்திற்கு விரைந்தார்.

காதலியைத் தேடிய மர்ம மனிதன்


மட்டக்களப்பு நாவற்குடாவில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மர்மனிதன் காதலியை தேடிச்சென்ற அப்பாவி இளைஞன் என தெரியவந்துள்ளது. புத்தளத்தை முந்தளம பிரதேசத்தை சேர்ந்த முகம்மட் சிபான் முகம்மட் நளீர் என்ற 23 வயது முஸ்லிம் இளைஞர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. திருகோணமலையில் ஐஸ் தொழிற்சாலையில் வேலை செய்யும் இவர் தன்னுடன் வேலை செய்த நாவற்குடாவை சேர்ந்த தமிழ் யுவதியான தன் காதலியின் வீட்டை தேடி சென்ற போதே இந்த பரிதாப நிலைக்கு உள்ளானார்.


இவர் நாவற்குடாவில் உள்ள தன் காதலியான தமிழ் யுவதியை தேடி சென்றதாகவும், ஊருக்கு புதியவரான அவர் தனது காதலி இருக்கும் வீதியின் பெயரை கூறி அது எங்கே இருக்கிறது என வீதியால் சென்ற ஆசிரியை ஒருவரிடம் கேட்ட போது அந்த ஆசிரியை பதறி அடித்துக்கொண்டு மர்ம மனிதன் என கூக்குரல் இட்டதாலேயே இந்த விபரீதம் நடந்ததாக தெரியவருகிறது.

அந்த வழியால் வந்த காத்தான்குடியைச்சேர்ந்த இரு முஸ்லீம் நபர்கள் அவரை துரத்திச்சென்று மடக்கி பிடித்து நாவற்குடாவில் உள்ள பொதுமக்களிடம் கொடுத்தனர்.

நாவற்குடா பொது விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இவர் அங்கு கூடிய மக்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.
நாவற்குடாவில் உள்ள தன் தமிழ் காதலியை தேடி வந்தேன் என சொன்னால் இன்னும் மோசமாக தாக்குவார்கள் என அஞ்சிய அந்த இளைஞர் பொதுமக்களின் அடிகளை எல்லாம் வாங்கிக்கொண்டார்.

இறுதியில் காவல்துறையினரிம் தனது நிலையை விளக்கிய போதும் உன்னை விடுதலை செய்தால் பொதுமக்கள் எம்மீது ஆத்திரம் கொள்வார்கள் நீதிமன்றத்தில் நிறுத்துகிறோம் நீதிமன்றம் முடிவெடுக்கப்பட்டும் என காவல்துறையினரும் தெரிவித்து விட்டனர். இந்த இளைஞர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இடம்-வலம் தெரியாத ஊருக்கு தன்காதலியை தேடி வந்ததற்காக அவர் 14 நாட்கள் தற்போது சிறைத்தண்டனை அனுபவிக்கிறார்

காவலரணை அகற்ற ஆர்ப்பாட்டம்


மட்டக்களப்பு புதுநகரில் நடமாடிய மர்ம மனிதர்களை அப்பகுதி பொது மக்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் சேத்துக்குடா காவலரணுக்குள் புகுந்ததாகத் தெரிவித்து புதூர் விமான நிலையத்துக்கு அருகில் அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மர்மமனிதர்களாக நடமாடி மக்களை அச்சுறுத்தி வருபவர்கள் இராணுவத்தினரும், காவல்துறையினருமே என குற்றம் சாட்டியதுடன் இவர்களின் முகாம்களை உடனடியாக அகற்றி தங்களை நிம்மதியாக வாழ விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


தற்போது மாணவர்களுக்கான உயர்தரப்பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பரீட்சைக்குத் தயார்படுத்த முடியாத அளவுக்கு இந்த மர்ம மனிதர் பிரச்சினை பாரிய சிக்கலை ஏற்படுத்தி வருவதாகவும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரிய அளவில் உளரீதியான பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். தாம் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அச்சம் அடைந்திருப்பதாக அங்கு கூடியிருந்த பெண்கள் தெரிவித்தனர். தங்களது கிராமங்களுக்குள்  நுழையும், மர்ம மனிதர்கள் விமான நிலையம்,  மற்றும் சேத்துக்குடா காவலரண் போன்ற பகுதிகளுக்குள்ளே தப்பிச் செல்வதாக அக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஊரின் மத்தியில் அமைந்துள்ள சேத்துக்குடா பொலிஸ் காவல் அரணை உடனடியாக அகற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வீதிகளில் ரயர்களை எரித்து வீதித்தடையை ஏற்படுத்தினர், இதனால் மட்டக்களப்பு நகருக்கும் படுவான்கரைக்குமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இன்று காலையில் மட்டக்களப்பு நகரிலிருந்து படுவான்கரைக்கு சென்ற அரச ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தால் தமது பயணத்தை தொடரமுடியாது திரும்பி வந்தனர். படுவான்கரையிலிருந்து வந்த மக்களுக்கும் மட்டக்களப்பு நகருக்குள் நுழைய முடியாத நிலையில் தமது ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.


பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அறிந்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், மண்முனைப்பற்று  பிரதேச சபைத் தவிசாளர்  சசிதரன் கிரிஸ்ரினா, வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் கே.விமலநாதன், மாநகர சபை உறுப்பினர் கிருபைராஜா உட்பட பலரும் அங்கு வந்து மக்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மர்ம மனிதன் பொய்-பொலிஸ்


வெளிநாடுகளிடமிருந்து டொலர்களை பெற்றுக்கொண்டவர்களே கிறீஸ் பூதம் என்ற கட்டுக்கதைகளை பரப்பி வருவதாகவும் மர்மமனிதன் என்று யாரும் இல்லை என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பூஜித ஜெயசுந்தர இன்று மட்டக்களப்பில் தெரிவித்தார்.


இந்த நாட்டில் கொடிய யுத்தத்தை நடாத்திக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தார்கள் ஆனால் அவர்கள் தற்போது அழிக்கப்பட்டுள்ளனர் தற்போது புதிதாக கிறீஸ் மனிதன் ஒன்றினைப் புகுத்தியுள்ளார்கள் அவன் யார் எங்கு இருக்கின்றான் என யாருக்கும் தெரியாது.  இது சிங்கள காடையர்களால் செய்யப்படுகின்றது தமிழ் முஸ்லிம் உறவைக் குலைப்பதற்காகச் செய்யப்படுகின்றது என பலர் கூறுகின்றார்கள். இவையெல்லாம் அப்பட்டமான பொய் பிரச்சாரங்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பூஜித ஜெயசுந்தர இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு தேவவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற கிறீஸ் பூதம் தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில். பிரபாகரன் செய்த கொடிய யுத்தம் தற்போது வெல்லப்பட்டுள்ளது தற்போது மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றார்கள் இப்படி இருக்கையில் புதியதொரு கிறீஸ் பூதம் ஒன்றினைக் கட்டி விட்டு மக்களை ஏமாற்றி பயமுறுத்துகிறார்கள. இவை சட்ட விரேதமாக ஆயுங்களை வைத்திருப்பவர்கள் மேற்கொள்ளலாம் சட்டவிரோத மான ஆயுதம் வைத்திருப்பவர்களுக்கு அதனை ஒப்படைப்பதற்கு தற்போது கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களை யாரும் அனுமதிக்கமாட்டார்கள் இவைகள் அனைத்தும் அப்பட்டமான பொய் வதந்திகள் எனக்கு ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் பணித்ததின் பேரில் நான் இந்த கிறிஸ் மனிதன் சம்மந்தமாக விளக்கமளிப்பதற்கு மட்டக்களப்புக்கு வந்துள்ளேன். இதனை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் பிரிவுகளிலுமுள்ள பொதுமக்கள் அரச அதிகாரிகளுக்கும் விளக்கமளிக்கவுள்ளேன்.


இந்நிகழ்வில் கிழக்குமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் விஜயகுணவர்த்தன,  மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர கரவிட்ட மற்றும் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் விசேட அதிரடிப்படை உயர் அதிகாரிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மதத்தலைவர்கள் வர்த்தக சங்கத்தினர் சிவில்; அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்

மலசலகூடத்தினுள் மர்ம மனிதன்

மர்ம மனிதர்கள் குடும்ப பெண்ணொருவரை மலசலகூடத்திற்குள் வைத்து அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் தாக்குதல் நடத்தியதாகவும் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கோளாவில் இரண்டாம் பிரிவு குமார் கடை வீதியிலுள்ள ஒருபிள்ளையின் தாயாரான ஜெகன் சோதிமலர் (20) என்பவரே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான ஜெகன் சோதிமலர்
சம்பவ தினம் இவர் மாலை 3 மணியளவில் மலசலகூடத்திற்கு சென்றபோது மலசலகூடத்திற்குள் மறைந்திருந்த இரு மர்ம மனிதர்கள் அவரை பிடித்து கை, கால்களை கம்பியினால் கட்டி வாயை சலோரேப்பினால் ஒட்டியபோது அருகிலுள்ள வீட்டின் பெண் ஒருவர் கண்டு கூச்சலிட்டதையடுத்து மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் குறித்த பெண் சிறுகாயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதேச மக்கள் பெரும்அச்சமும் பீதியுமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை அக்கரைப்பற்றில் மர்மமனிதன் தொடர்பான சம்பவங்களின் போது பொலிசார் மீது கல்வீசி கலகம் விளைவித்ததாகக் கூறப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை இன்று பகல் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளானவரின் வீடு
சாகம வீதியில் நேற்று இரவு 12 மணியளவில் மர்மமனிதன் ஒருவரை பொதுமக்கள் துரத்திச் செல்லும்போது ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பியசேனாவின் வீட்டுக்கு அருகில் மர்மமனிதன் தப்பிச் சென்றுள்ளார். இதன் போது பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் காவல் கடமையில் ஈடுபட்ட பொலிசாருடன் ஏற்பட்ட கைகலப்பின்போது பொலிசார் மீது கல் வீசியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான யோ.உதயராஜ் என்பவரை பொலிஸார் இன்று பகல் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்

சிகிரியாவில் மர்ம மனிதன் கைது


தம்புள்ள சிகிரியா பிரதேச மக்களை கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அச்சுறுத்தி வந்த மர்ம மனிதன், பெண்கள் அணியும் பல்வேறு விதமான உள்ளாடைகள் நிரம்பிய பொதியுடன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் சீகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வஜிர அத்தபத்து தெரிவித்தார். 

பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் சிகிரியாவை அண்டியுள்ள "பிதுரங்கள்" காட்டினுள் மரங்களிடையே ஒளிந்திருந்த போது சனிக்கிழமை இரவு7.30 மணியளவில் இவர் கைது செய்யப்பட்டார். இம் மர்ம மனிதன் கைகளுக்கு வளையல்களும் விரல்களுக்கு மோதிரங்களும் அணிந்து முகத்தைக் கறுப்புத் துணியால் மறைத்திருந்ததாக சிகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.


ஆரம்பகட்ட விசாரணைகளின் போது குறித்த சந்தேகநபர் தன்னை சேர்.ஜோன் கொத்தலாவல என்றும், யுத்தகாலத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது காலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளான். குறித்த சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சந்தேகிப்பதாவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பொலநறுவைப் பகுதியைச் சேர்ந்த இவரது வயது 34 எனவும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மர்ம மனிதனை பிடித்து அடிதடி


 துறைநீலாவணையில் அண்மையில் இரவு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில், மர்ம மனிதர்களைத் துரத்திச் சென்றபோது அவர்கள் பொலிஸ் சோதனைச் சாவடிக்குள் ஓடியதாக கூறி பொதுமக்கள் பொலிஸ் சாவடி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்விடத்துக்கு படையினர் வரவே பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.


மர்ம மனிதனைத் துரத்தியதால் படையினரால் தாக்கப்பட்ட ஒருவர்

அதன் பின்னர் வயல்வேலை செய்துவிட்டு வந்தவர்கள், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் வேறு வீடுகளில் படித்துவிட்டு வீதியால் வந்தவேளையில் இரவு 10.30 மணியளவில் சீருடையில் வந்த படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் முதுகுப் பகுதிகளில் பலத்த காயங்கள் உள்ளன. மோட்டார் சைக்கிள் செயின்களாலும், தடிகளாலும் தாக்கப்பட்டுள்ள நிலையில் இருந்த இளைஞர்கள் மூவரையும் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசாவும், பா.அரியநேத்திரன் அவர்களும் இன்று காலை களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.


இதேவேளை கல்முனை அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கல்முனை பொலிஸ் நிலையத்தின் சோதனைச் சாவடி மீது கல்வீச்சில் ஈடுபட்டதாகக் கூறி இன்று காலை 4 இளைஞர்களை கல்முனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களின் கைது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரைச் சந்தித்து பேசியபோது, கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அதன் பின்னரே அவர்களை விடுவிக்க முடியும் எனவும் தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


அத்துடன் கிண்ணியாவிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிண்ணியா பிரதேச செயலகத்தை தற்போது பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை இன்று திங்கட்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளது. இன்றையதினம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் 5 பேர் உட்பட 24 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே பொதுமக்கள் கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட வண்ணமுள்ளனர். 


கிண்ணியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக  பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.  இந்த நிலையில், பிரதேச செயலகத்திலுள்ள அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா மற்றும் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஆகியோர் உட்பட அங்குள்ள அலுவலர்கள் வெளியேறமுடியாதவாறுள்ளனர். 


அண்மையில் சாய்ந்தமருதில் வைத்து மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தில் பிடிக்கப்பட்ட இரு நபர்களை கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததை தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது கல்முனை நகரில் வைத்து கற்களால் வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். தேவேளையில் பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாட் மற்றும் சமூகப் பெரியார்கள், இராணுவ அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸார் ஆகியோர்களுக்கிடையே சந்திப்பொன்று நடைபெற்றது. 


பிடிக்கப்பட்ட மர்ம நபர்கள் என சந்தேகிக்கப்படுவோரில் ஒருவர் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள உருக்கு ஒட்டுத் தொழிற்சாலையில் கடந்த 5 வருடங்களாக பணியாற்றுபவர் என்றும் மற்றைய நபர் அவரை சந்திப்பதற்காக பாணமை பிரதேசத்திலிருந்து வருகை தந்த அவரின் உறவினரான கடற்படை உத்தியோகத்தர் எனவும் தெரியவந்தது. இதனை மேற்படி கலந்துரையாடலில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிக் கூடியிருந்த மக்களுக்குத் தெளிவுபடுத்தியபோதும் அதனைப் பொருட்படுத்தாத சிலர் வன்முறையில் ஈடுபட்டதனை அடுத்து இராணுவத்தினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


மற்றுமொரு சம்பவத்தில் நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டம் பெரிய போரதீவுப் பகுதியில் வைத்து 19 வயதுடைய இளம் யுவதியொருவர் மர்ம மனிதரால் தாக்கப்பட்டு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

நாவலப்பிட்டியில் மர்ம மனிதன்


நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓவிட்ட, ஜெயசுந்தரபுர ஆகிய பிரதேசங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரொருவரை பிரதேச மக்கள் பிடித்து நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நாவலப்பிட்டி ஓவிட்ட பகுதியில் சந்தேகத்தக்கு இடமான முறையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடமாடிய நபரொருவரை அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து பிடித்து ஜெயசுந்தரப் பகுதியில் உள்ள தொலைபேசிக் கம்பமொன்றில் கட்டி வைத்தனர்.


பொதுமக்களால் பிடிக்கப்பட்ட சந்தேக நபர் அதிகாலை வேளை குறிப்பிட்ட பிரதேசத்துக்கு வருகைத் தந்ததற்கான காரணத்தினைக் கூறவில்லை. அதிகாலை முதல் இந்த சந்தேக நபர் பிடிப்பட்டிருப்பது தொடர்பில் பிரதேசத்தில் ஏனைய மக்களுக்கும் தகவல் பரவியதால் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த சந்தேக நபரைக் காணுவதற்கு காலை 6 மணிவரை கூடியிருந்தனர். 

அதன் பின்பு காலை 6.15 மணிளவில் குறிப்பிட்ட இடத்துக்கு வருகைத் தந்த நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதய விக்கிரம தலைமையிலான பொலிஸார் சந்தேக நபரை பொதுமக்களிடமிருந்து மீட்டு பொலிஸ் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.  குறிப்பிட்ட சந்தேக நபர் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் பல்வேறு குற்றச்செயல்களுக்காக சிறை சென்று வந்தவரென்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

திருமலையில் கிறீஸ் மனிதன்


திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மர்ம மனிதன் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் வெட்டப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். இறக்கக்கண்டி, வாழையூற்று பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய கந்தையா அருமைநாயகம் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வெட்டப்பட்டுள்ளார்.  இவர் வெங்காய செய்கையில் ஈடுபட்டு வருபவர் எனவும், மாடு துரத்துவதற்காக வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளார்.


இதேபோல், நிலாவெளி, இக்பால் நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய அருளானந்தம் அரவிந்த என்ற இளைஞர் 10ஆம் கட்டை பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இவர்கள் இருவரும் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, திருகோணமலை மூதூர் அக்கறைச்சேனை பகுதியில் கிறீஸ் மர்ம மனிதன் பெண்களுடன் சேட்டைவிட்டுக் கொண்டிருந்தவேளை அப்பகுதி இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டான். இச்சுற்றிவளைப்பின்போது மூவர் தப்பி ஓடுவதை அவதானித்த இளைஞர் குழு பின்தொடர்ந்து சென்றவேளை அம்மர்ம மனிதர்கள் கரையோர கிராமமான ஹபீப் நகர் பகுதியில் அமைந்துள்ள கடற்படையினரின் காவலரணிற்குள் புகுந்துள்ளனர்.


பின்னர் மர்ம மனிதரை தம்மிடம் ஒப்படைக்கக்கோரி பிரதேச மக்கள் காவலரனை முற்றுகையிட்டிருந்த நிலையில் இராணுவத்தினர் மர்ம மனிதர்களை இராணுவ கவச வாகனத்தில் அழைத்துச்சென்றனர். இதனைத் தொடர்ந்து ஆத்திரமுற்ற பொது மக்கள், காவலரனை நோக்கி கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டனர். தற்போது, கடற்படையினரின் காவலரணுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


நன்றி: தமிழ் சீ.என்.என்.

200 போலி கிறீஸ் மனிதர்கள் கைது


கிறீஸ் மனிதர்கள் என்ற பெயரில் போலி நாடகமாடிய 200 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாகவூம் மர்ம மனிதன் என்ற கூற்றை இனிமேல் மறந்து விடுங்கள் என்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்ற நடைபெறற் ஊடகவிலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கிறீஸ் மனிதன் நடமாடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற இடங்களில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளுக்குப் பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மக்களிடையே பேசப்பட்டுவரும் கிறீஸ் மனிதன் எனும் வதந்தியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருடர்களும் கொள்ளையர்களும் தாமே பூதம் போன்று வேடமிட்டு மக்களை ஏமாற்றி மிகவும் சாதுரியமாக தமது திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனரே தவிர உண்மையில் நாட்டில் அவ்வாறான கிறீஸ் மனிதர்கள் இல்லையெனவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர கருத்து தெரிவிக்கையில்; கஹவத்தையில் இடம்பெற்ற பெண்கள் கொலையைத் தொடர்ந்தே கிறீஸ் மனிதன் எனும் பெயர் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று வரையில் 20 இடங்களில் இவ்வகையான பூதம் உலாவருவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் மக்கள் பீதியடைவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிருந்தபோதும் பொலிஸாருக்கு அது தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் கிடைத்திருக்கவில்லை.

தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் 200 பேரில் பெரும்பாலானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள். இவர்கள் போதை மயக்கத்திலும் அச்சமயம் கொண்டிருந்த மனநிலை மற்றும் காமக்குரோதம் காரணமாகவும் பெண்களை தாங்கள் பயமுறுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.


கண்டி ஹசலக்கவில் கைதுசெய்யப்பட்டுள்ள ஏழு பேரை மக்கள் தங்களை கண்டு மிரண்டு ஓடுவதை ரசித்ததாகவும் அதனையே பொழுதுபோக்காக செய்து வந்தததாகவும் கூறியுள்ளனர். அலவத்து கொடையில் ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை அணிந்து சென்று உலா வந்துள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். அவரிடமிருந்து 25 உள்ளாடைகளை கைப்பற்றியதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். வாழைச்சேனையில் கைது செய்யப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் அவரை பிரதேசவாசிகள் இஸ்லாமிய நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென்று கூறியே பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிக்கவரட்டிய பகுதியில் கறுப்புநிற நீண்ட ஆடை அணிந்து திரிந்த பிச்சைக்காரனைக் கண்டு ஊர்மக்கள் பூதமென பயந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

தொடரும் மர்ம மனிதன் சர்ச்சை


மர்ம மனிதன் நடமாட்டம் காரணமாக பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொலிசாருடன் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களி்ல் உள்ள மக்களின் இயல்பு நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக மர்ம மனிதர்களின் நடமாட்டம் பற்றிய அச்சங்களும் வதந்திகளும் அங்கு பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட காரணமாகியுள்ளன.


இதற்கிடையே சனிக்கிழமை அதிகாலை சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்த அசம்பாவிதங்கள் பற்றி கூடுதல் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் கிறீஸ் பூதங்கள் பின்னணியில் ஏதாவது தீய சக்திகள் இருக்கலாம் என்று ஜனாதிபதி சந்தேகிப்பதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் சனிக்கிழமை காலை 6.00 மணியுடன் நீக்கப்பட்ட போதிலும் அந்த பிரதேசத்தில் நிலைமை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. பிரதேசத்தில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டு, வீதிகளில் பொது மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வெள்ளிக்கிழமை மாலை பொத்துவில் பிரதேசத்தில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் அலியார் மொகமது மவ்ஜூன் என்ற இளைஞனின் ஜனாஸா நல்லடக்கம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதேவேளை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று மாலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்ததை அடுத்து தமது பிரதேசத்திலும் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தமிழோசையிடம் கூறினார். தற்போது அங்கு பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


‘கிரீஸ் பூதங்கள்` எனப்படுகின்ற மர்ம மனிதர்களின் நடமாட்டங்கள் குறித்து பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ள கிழக்கு மாகாணத்தின் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பொலிசாருக்கு மேலதிகமாக அங்கு இராணுவத்தினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நாவற்குடாவில் இன்று காலை மர்ம மனிதன் நடமாடுவதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் வீதிகளில் டயர்களைப் போட்டு எரித்து போக்குவரத்து தடைகளையும் ஏற்படுத்தினர். பொலிசாரும் இராணுவத்தினரும் அங்கு விரைந்து நிலமையை கட்டுப்படுத்தினர்.

மர்ம மனிதன் என சந்தேகத்தின் பேரில் பொதுமக்களால் பிடிக்கபட்ட நபரொருவர் பொலிஸாரால் மீட்கப்பட்டு தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை மக்களின் இவ்வாறான எதிர்ப்புகளை அடக்க இராணுவத்தினரை பயன்படுத்தும் நடைமுறை கைவிடப்பட வேண்டும் என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.


மக்கள் சட்டத்தை கையிலெடுக்கும் போக்கை கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மர்ம மனிதர்கள் பற்றிய முறைப்பாடுகளை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் கூறினார். அரசாங்கத்தின் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்குடன் செயற்படும் சக்திகள் ஏதும் இதன் பின்னணியில் இருக்கலாம் என்று ஜனாதிபதியும் சந்தேகிப்பதாக நீதியமைச்சர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு பெண்கள் இரத்தம்?



பொத்துவிலில் கிறீஸ் பூதங்களின் தாக்குதல்களிற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி மக்கள் பொலிஸாருக்கு எதிரக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனை சுமூகமாக நிலைக்கு கொண்டுவரும் நோக்கில் இன்று நண்பகல் பொத்துவில் ஜிம்பா பெரிய பள்ளிவாசலில் நீதி அமைச்சர் றவூப் ஹக்கிம், சிரேஸ்ட அமைச்சர் பௌசி, பிரதி அமைச்சர் ஹிஸ்முள்ளா, உள்ளுராட்சி மாகாணசபை அமைச்சர் அதாவுள்ள ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.


இதன்போது அமைச்சர் பௌசி, ஜனாபதியின் நீண்ட ஆயுளை வேண்டி நடாத்தப்படும் பூஜைக்காக இளம் பெண்களின் இரத்தம் வேவைப்படுவதாக கதை ஒன்று சோடிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யான செய்தியே என தெரிவித்தார். அவ்வாறு ஜனாதிபதிக்கு உண்மையிலேயே இரத்தம் தேவைப்படும் எனின் "ஜனாதிபதிக்கு இரத்தம் தேவை என அறிவித்த மறுகணமே இலட்சக்கணக்கான இளம் பெண்கள் இரத்ததானம் செய்ய வரிசையில் காத்திருப்பர்" எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான விசமிகளினால் தான் இத்தகைய செயற்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்டத்தை நிலைநாட்ட வேண்டியது பொலிஸாரின் கடமை, அதனை செய்யாது அவர்களே சட்டத்தை மீறுவது குற்றம் என அமைச்சர் றவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். இந்த மர்ம மனிதனால் ஏற்படுத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பொத்துவிலில் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை



சனி, 13 ஆகஸ்ட், 2011

வாழைச் சேனையில் மர்ம மனிதன்


வாழைச்சேனை பிரந்துருச்சேனை கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை  இரவு புகையிரத நிலையத்தில் நடமாடிய ஒருவரை 'மர்ம மனிதன்' என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் அடையாளம் காட்டியதனை அடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு வாழைச்சேனை பிரந்துருச்சேனையில் மர்ம மனிதனின் நடமாட்டம் இருந்ததாக செய்தி பரவியதைத் தொடர்ந்து பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.


இதன்போது அங்கு நடமாடிய மர்ம மனிதர்கள் எனக் கருதப்பட்ட இனந்தெரியாத நபர்களை பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட போது தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் வைத்து நடமாடிய மர்ம மனிதன் என பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் - இராணுவத்திற்கு அடையாளம் காட்டியுள்ளனர். இராணுவத்தினர் அவரை அனுப்ப முற்பட்டபோது மக்கள் ஆத்திரமடைந்ததுடன் பெருந்திரளான மக்கள் அவ்விடத்தில் கூடி புகையிரதத்தை மறித்துள்ளனர்.

நீர்கொழும்பைச் சேர்ந்தவரென தன்னை அடையாளப்படுத்திய குறித்த சந்தேகநபர் - தான் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் அவர் வெலிக்கந்தைக்குச் செல்வதற்கு பயணச் சீட்டு எடுத்ததை அடுத்து மேலும் குழப்பமடைந்த பொதுமக்கள் - சித்தாண்டி இராணுவ படை பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய வாழைச்சேனை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அங்கு சென்ற பொலிஸார் சந்தேகநபர் சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர் என்பதால் பொதுமக்களிடமிருந்து குறித்த சந்தேகநபரை பாதுகாக்கவும் மேலதிக விசாரணை மேற்கொள்ளவென கூறி வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து வாழைச்சேனை பிரதேசத்தில் சிறு பதற்றநிலை ஏற்பட்டது.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

சம்மாந்துறையில் மர்ம மனிதன்?


பதிக்கப்பட்ட பெண் சண்முகம் சாந்தி (வயது 26)


வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள கோரக்கோயில் பிரதேசத்தில் பெண்ணொருவர் குளித்துக்கொண்டு இருந்திருக்கிறார். இரவுவேளையில் அவ்விடத்திற்கு மர்மமான முறையில் வந்த இருவர் அப்பெண்மீது சேஷ்டையில் ஈடுபட்டுள்ளனர். உடனே அப்பெண் கூச்சலிட்டு ஊரைக் கூட்டியதும் அவ்விருவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்துள்ளனர். இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேக நபர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு சத்தமிட்டுள்ளனர். இவர்களை பொலிஸார் அகற்ற முற்பட்டவேளையில் பொலிஸார் மீது கல்லெறிகள் விழுந்துள்ளன.  ஆத்திரமடைந்த பொலிஸார், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலகத்தில் ஈடுபட்டவர்களை அடக்க முற்பட்டிருக்கிறார்கள்.


பெண்ணின் கையில் ஏற்பட்ட கீறல் (இதற்கா இவ்வளவு அக்கப்போர்)

இது தொடர்பாக களமுனையிலிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கையில்; இங்கு ஒரு பெண்ணின் கையை இனந்தெரியாதவர்கள் (மர்ம மனிதர்கள்) கிளித்துவிட்டுச் சென்றனர். உடனே மக்கள் அவரை விரட்டிப்பிடிக்கச் சென்றனர். தீடீரென் அவன் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளான். பொதுமக்கள் மர்ம மனிதனைத் தேடி வலை விரிந்திருக்கின்றனர். கையை வெட்டியவனும் மர்ம மனிதனாகத்தான் இருக்கவேண்டும் என்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் மக்கள் ஒன்றுகூடி அவனைக் காட்டுமாறு கூச்சலிட்டுள்ளனர். மர்ம மனிதனின்மேல் ஆத்திரத்தில் இருக்கும் மக்கள் அவனைக் கொன்றுவிடுவார்கள் என பொலிஸார் பொதுமக்களைத் தடுக்கவே, பொலிஸாரை நோக்கி கல்லெறிகள் வீழ்ந்தன. மக்கள் அவனை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோஷமிட்டனர்.  இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


பெண் குளித்துக்கொண்டிருந்த இடம்

தற்சமயம் நிலைமை சுமூக நிலைக்குத் திரும்பியுள்ளது. விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சேத விபரம் பற்றி இதுவரை எதுவித தகவலும் வரவில்லை. இதுபற்றி பொலிஸாருடன் தொடர்புகொண்டு கேட்டபோது எதுவும் சொல்ல மறுத்துவிட்டனர். தற்போது மர்ம மனிதன் என்ற பெயரில் சந்தேக நபர்கள் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவம் பொலிஸார் அவர்களைக் காப்பாற்றுவதாலும் பொதுமக்களுக்கு அரசு மீதான சந்தேகம் வலுப்பெறுவதாக பலமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உண்மையில் நடப்பது என்ன? யார் இந்த கிறீஸ் (மர்ம) மனிதன்? ஏன் பெண்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவேண்டும்? அல்லது தற்போது மர்ம மனிதன் பெயரைப் பயன்படுத்தி வெளியாட்கள் தங்களது கைவரிசையைக் காட்டுகின்றார்களா? இதற்கான உள்நோக்கம் என்ன? அரசு ஏன் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வாறான பல கேள்விக் கணைகளுக்கு விடைதெரியாமல் இந்த மனிதனைப் போலவே மர்மமாக உள்ளது.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

கிறீஸ் மனிதன் பிடிபட்டான்?


"இதுவரை பிடிபட்ட கிறீஸ் மனிதர்களும் மக்களின் வேண்டுகோளும்"

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கடந்த சில தினங்களாக உடல் முழுவதும் கிரீஸ் பூசிய மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. என்ற செய்தியினால் மக்கள் மிகுந்த பீதியுடன் காணப்படுவதுடன் இரவு வேளைகளில் நித்திரையில்லாமல் கண்விழித்திருக்க வேண்டிய பரிதாப நிலையொன்று தோன்றியுள்ளது.

வாழைச்சேனையில் பிடிக்கப்பட சந்தேக நபர்
அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் இரவில் மக்கள் நடமாடுவதற்கு தயங்குவதுடன் தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடாததனால் முழுமையாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மர்ம மனிதர்களின் நடமாட்டத்தை கண்டறிவதில் கிராமங்கள் தோறும் இளைஞர்கள் கூரிய ஆயுதங்களுடன் காவல் காத்து வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் மக்கள் புனித நோன்பினை நோற்று வருவம் இக்காலத்தில், இரவு வேளைகளில் பெண்கள் வீட்டுக்கு வெளியே பள்ளிவாசல்களுக்கு சென்று மார்க்க கடமைகளில் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டுவதனால் வீடுகளுக்குள்ளேயே தமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

கல்முனையில் பிடிக்கப்பட்ட சந்தேக நபர்
வீடுகளில் ஆண்கள் இல்லாத வேளைகளிலேயே இம்மர்ம மனிதர்கள் தமது கைவரிசையினை காட்டுவதாக உலவும் செய்தியினால் ஆண்களும் தமது வேலைகளின் நிமித்தம் வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர். கிரீஸ் தடவிய மனிதர்கள் பற்றி பிரதேசங்களில் உலவும் செய்தியினால் இரவில் செல்லும் சாதாரண கிராம வாசிகளைக்கூட சந்தேகிக்கும் அளவிற்கு மக்களிடையே பீதி அதிகரித்துக் காணப்படுகின்றது. க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்காக கூட்டாக இணைந்து கல்வி கற்கும் மாணவர்கள் தமக்குத் தேவையான பாடக்குறிப்புகளை தமது நண்பர்களின் வீடுகளுக்குக் கூட சென்று வாங்கிக் கொள்ள முடியாத நிலையில் சந்தேகமும், பயமும் மக்களை ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளது என்று இலங்கை இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

குருணாகலில் பிடிக்கப்பட்ட சந்தேகநபர்கள்
பதுளை மற்றும் ராகலை பகுதிகளில் கிறீஸ் பூதம் (கிறீஸ் யக்கா) என சந்தேகிக்கப்படும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பிரதேசத்தில் கிறீஸ் பூதம் (கிறீஸ் யக்கா) என சந்தேகிக்கப்படும் ஒரு குழு தலைமறைவாக இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகலை பிரதேசத்தில் பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தனர் என்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பதுளை பகுதியில் தலைமறைவாகியிருந்த ஆறு பேரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதேபோன்று இவ்வாறான மர்மமனிதர்களின் நடமாட்டம் நாடு முழுவதிலும் காணப்படுவதாகவும், மக்கள் பீதியில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 நாவலடியில் கைது செய்யப்பட்டுள்ள ஏறாவூர் மிச் நகரைச்சேர்ந்த அசனார் இதாஸ் என்ற ரியாஸ்
நாட்டின் பல பாகங்களில் பேசப்படும் மர்மமனிதர்கள் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்கள் அல்லது இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது வெறும் கட்டுக்கதைகளே தவிர அதில் எவ்வித உண்மையுமில்லை என்று பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார். மேற்படி மர்மமனிதர் தொடர்பாக விசாரணைகளை நடத்த பொலிஸ்மா அதிபர் தயார் நிலையில் இருப்பதாகவும் இது விடயமாகப் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை இது ஒரு திட்டமிட்ட பிரசாரமே தவிர உண்மையில்லை என அவர் குறிப்பிட்டார்.

பிடிக்கப்பட்ட இன்னொரு சந்தேக நபர்
இதுவரை கிறீஸ் மனிதர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அங்காங்கே சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையிலேயே கிறீஸ் மனிதர்கள்தானா என்று இன்னமும் உறுதி செய்யப்பட்டவில்லை. இருப்பினும் மலையகம் மற்றும் கிழக்கு மாகாணத்தி்ல் ஆண்கள் இரவு, பகலாக மர்ம மனிதர்களைத் தேடிவருகின்றனர். மலையகத்தில் பொலிஸாரால் கண்டு பிடிக்காமல் போய்விட்டதால் விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்மாந்துறையில் பிடிக்கப்பட்ட வெள்ளத்தம்பி ஆதம்பாவா (மஜீத்)
மர்ம மனிதர்கள் தொடர்பான சம்பவங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பதுளை தல்தென பிரதேசத்தில் பிடிக்கப்பட்டவர்கள் 
மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் மர்ம மனிதர்கள் குறித்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் வேண்டுமென்றே மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான வதந்திகளை பரப்புபவர்களாக இருப்பின் அவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளினால் மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்களின் சூத்திரதாரிகளைக் கூட அதன் ஊடாக கைது செய்ய முடியாமை அவசரகால சட்ட அமுலாக்கம் அர்த்தமற்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. 

பொலநறுவையில் பிடிபட்ட மனிதன்
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினமான விடயமல்ல. எதிர்க்கட்சியில் இருக்கும் பிரஜைகள் முன்னணி மக்களின் ஆதங்கங்களை பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் ஒலிக்கச் செய்கின்ற போதிலும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கே உரித்தானது எனக் குறிப்பிட்டுள்ளது. 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites