எஸ். எல். மன்சூர்
கடந்த சில வாரங்களாக இலங்கையின் மலையகம், கிழக்கு பிரதேசங்களில் அங்குவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையினை கதிகலங்கச் செய்துள்ள மர்மம் நிறைந்ததாகக் கூறப்படுகின்ற கிறீஸ்மேன் எனப்படும் கிறீஸ் மனிதனது நடவடிக்கைகள் புதிராத புதிராகவே காணப்படுகிறது. பல்வேறு கட்டுக்கதைகளுடன் உலவாரும் இம்மனிதர்களது நடவடிக்கைகளைப் பார்க்கின்றபோது பின்புலத்தில் பாரிய சதித்திட்டங்களுடன் நாட்டின் மீண்டும்மோர் பிரச்சினையை கிளப்பி அதில் குளிர்காய நினைக்கும் சதிகாரர்களின் செயற்பாடாக இருக்குமோ? எனவும் மக்களை எண்ணத்தோன்றியுள்ளது. அதேவேளை நாட்டின் இதர பகுதிகளில் இல்லாத அதேவேளை மேற்படிபிராந்தியங்களில் குறிப்பாக பெண்களை மாத்திரம் இம்சைப்;படுத்துகின்ற அல்லது துவம்சம் செய்ய நினைக்கின்ற இம்மனிதர்கள் ஏன் ஆண்களை துவம்சம் செய்வதற்கு நிணைக்காமையானது இன்னும் வேறுபல ஊகங்களையும், சந்தேசகங்களையும் மக்கள் மனதில் கிளப்பிவிட்டுள்ளது.
உண்மையில் ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் இறக்காமம் பிரததேசத்தில் இரவு நேரங்களில் பெண்களின் மார்பு, கைகளை பிடிக்கின்ற ஒரு குழு அல்லது ஒரு தனிமனிதன் உலாவுவதாக கதை பரப்பப்பட்டு பின்னர் கையுமெய்யுமாக பிடித்தது, அதன் பின்னர் அங்குள்ள பொலிசாரின் காவல் நிலையத்தின் காப்பரண்கள் பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அம்பாறையின் கிராமங்கள் அனைத்தும் பின்னர் படிப்படியாக தோற்றம் பெற்றுவந்த இந்த கிறீஸ் மனிதனது கதை வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேசத்தில் பாரிய மக்களது ஆர்ப்பாட்டதில் போய் முடிவுற்றபோது அங்கே பொலிசாரும் பொதுமக்களும் மோதவேண்டிய நிலை ஏற்பட்டது. உண்மையில் நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு மார்க்கமாக காணப்படும் பொலிசாரின் நடவடிக்கைகள் மக்களின் மனதில் பாரிய வடுவினை ஏற்படுத்துகின்ற நிலைமையில் இந்த அதிரடியான நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்வதானது நாட்டில் மீண்டும் இயல்புநிலைக்கு மாற்றமான தோற்றப்பாட்டை யாராவது பின்புலத்திலிருந்து தோற்றுவிக்கின்றனரா? அல்லது உண்மையாகவே மர்மம் நிறைந்த கிறீஸ் மனிதன்தானா? என்பது புரியாத புதிராகவே காணப்படுகிறது.
அதேவேளை இவ்வாறான கிறீஸ் மனிதன் எனச் சந்தேகிக்கப்படும் மனிதர்களை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கின்றபோது அவர்களை விடுவிக்கின்ற பொலிசாரின் செயற்பாடுகளே பொலிசாருக்கும் பொதுமக்களினதும் முறுகளுக்கு காரணம் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் வாழைச்சேனைப் மற்றும் பொத்துவில் பகுதிகளில் இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக நடைபெற்ற சம்பவங்கள் மிகவும் பாரியளவிலானதாக தோற்றம் பெற்றாலும் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கின்ற நிலைமை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்துவதற்கு கால் கோலாய் அமையும் என்பதாகவும் கூறப்படுகின்றது.
பதுளை, ராகலை, ஹட்டன் பிரதேசங்களில் சந்தேகத்தின் பேரில் பலர் கைதாகியுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் அங்கே கிறீஸ் பூதம்(கிறீஸ் யக்கா) என்கிறபேரில் உலாவுகின்ற குழுவொன்றையும் அதிரடிப்படையினர் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இம்மனிதர்களது செயற்பாடுகள் பற்றி பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன் ஹ_லுகல்ல தெரிவிக்கையில் “இதில் எவ்வித உண்மையும் இல்லை” என்றும், பொலிஸ்மா அதிபர் “இம்மர்ம மனிதர்களது நடமாட்டத்தை விசாரிக்க தாம் தயாராக இருப்பதாகவும்” செய்திகள் தெரிவிக்கின்ற அதேவேளை அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இராணுவத்தினர் கடந்த ஒரு சில நாட்களாக இரவு பகல் என்று பாராது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தில் இம்மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் பிள்ளை ஒன்று தற்போது கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான நடவடிக்கைகளை பொலிசார் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என்பதற்காகவே பொலிசார் மீது பொதுமக்கள் மீதான தாக்குதலை மேற்கொண்டனர் எனவும் கூறப்படுகின்றது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களும், அமைச்சர் பௌசி, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா போன்றோரும் நிலைமையை நேரில் அவதானிக்கச் சென்று மக்களை அமைதிப்படுத்தியும் உள்ளனர்.
தற்போது முஸ்லீம்களின் புனித நோன்பு காலம். இக்காலங்களில் இரவுநேரத்தில் பள்ளிகளில் அதிகளவு தொழுகை போன்ற சமயச் செயற்பாடுகளில் ஈடுபடுவது வழக்கம். மர்ம மனிதர்களின் நடமாட்டம், ஊரடங்குச் சட்டம் போன்றவற்றினால் கலவரம் அடைந்துள்ள மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தம் விளைவிக்கின்ற நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே கூடாது. அதேவேளை பொதுமக்கள் சட்டத்தைக் கையிலெடுப்பதும் பிழையான தோற்றத்தை ஏற்படுத்தும். அதேநேரம் இவ்வாறாக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்தமை, சரியான விசாரணை மேற்கொள்ளாமை போன்றனவும் பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியதன் எதிரொலியே பாரியளவிலான விரிசலுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
இவ்வாறனவர்களின் நடமாட்டம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் செயலாளருமான ஸ்ரீரங்கா அவர்கள் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் இம் மர்ம மனிதர்கள் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் வேண்டுமென்றே மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான வதந்திகளை பரப்புபவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரகால சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பங்களின் உண்மையான சூத்திரதாரிகளை இதனூடாக கைது செய்ய முடியாமை அவசரகால சட்ட அமுலாக்கம் அர்த்தமற்றது எனவும் கூறியுள்ளார்.
மக்கள் வியாபார நோக்குடன் பிரதேசங்களுக்குள் செல்வதும் வருவதுமாக இருந்த நிலையில் இன்று எப்பிரதேசத்திற்குச் சென்றாலும் மக்கள் பார்வை வித்தியாசமாகவே காணப்படுகிறது. கிறீஸ் மனிதன் குறிப்பாக பெண்கள் தனிமையில் இருக்கின்றபோது அல்லது தனிமையாக செல்லும் போது அவர்களது கைகளில், நெஞ்சில் கத்தியினால் கீறிவிட்டு இரத்தத்தை பஞ்சித் துண்டில் தொட்டுக் கொள்வது எனவும் பொதுமக்களிடையே கதை உலாவுகின்றது. கடந்த 8ஆந்தகதி சம்மாந்துறையில் இரவு 8 மணியளவில் கோரக் கோவில் பிரதேசத்துப் பெண் ஒருவர் குளிக்கின்றபோது அப்பெண்மீது ஒரு மனிதன் சேஷ்டையில் ஈடுபட்டதாகவும் அப்பெண் கூக்குரலிட்டபோது அம்மனிதன் பொலிஸ் நிலையத்திற்குள் சென்;றதாகவும் இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து சப்தமிட்டு கோஷம் எழுப்பினர். அங்குபொலிசார் பொதுமக்களை அகன்று செல்லுமாறு பணித்தபோது பொலிசார் மீது கல்லெறி வீசப்பட்டதாகவும், இதனைத் தடுக்கவே கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி கலகத்தை அடக்க முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்ற சம்பவங்கள் இப்பிராந்தியத்தில் பல இடங்களில் ஏற்படுள்ள நிலையில் பொதுமக்களின் விசனம் காரணமாகவே பொலிசார் பொதுமக்கள் மீதான வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது வீதிமுழுவதும் இராணுவ மயமாக காட்சி தரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அனாமோதய துண்டுப் பிரசுரங்களும் வீசப்பட்டு, உடனடியான ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், நோன்பு காலம் என்பதனால் இராணுவத்தினரின் வீதி உலா நடவடிக்கைகளினால் கடையடைப்புக்களோ ஆர்ப்பாட்டங்களே இடம்பெறவில்லை. பொத்துவில், வாழைச்சேனை, சம்மாந்துறை, இறக்காமம், மலையகம் உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் மக்களின் உள்ளத்தை கிலி கொள்ளச் செய்த மர்ம மனிதன் பற்றிய புதிர் புரியாத புதிராகவே இருக்கப் போகின்றதா? அல்லது இவ்விடயத்தில் அரசியல் பின்னணி கலந்துள்ளதா? இதனைச் செய்பவர்கள் யார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார், பெண்களின் இரத்தத்தை மாத்திரம் பெறவேண்டியதன் மர்மம்தான் என்ன? இதுபோன்ற வினாக்களுக்கு விடைகாண்து பொதுமக்களா? பொலிசாரா?; இம்மர்ம மனிதன் உண்மையான கிறீஸ் மனிதனா? அல்லது இயல்பு வாழ்க்கையினை குழப்ப எத்தனிப்பவர்களின் கைவரிசையா? என்பது இன்னும் புதிராகவே தெரிகிறது.









0 comments:
கருத்துரையிடுக