மர்ம மனிதர்கள் குடும்ப பெண்ணொருவரை மலசலகூடத்திற்குள் வைத்து அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் தாக்குதல் நடத்தியதாகவும் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கோளாவில் இரண்டாம் பிரிவு குமார் கடை வீதியிலுள்ள ஒருபிள்ளையின் தாயாரான ஜெகன் சோதிமலர் (20) என்பவரே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான ஜெகன் சோதிமலர்
சம்பவ தினம் இவர் மாலை 3 மணியளவில் மலசலகூடத்திற்கு சென்றபோது மலசலகூடத்திற்குள் மறைந்திருந்த இரு மர்ம மனிதர்கள் அவரை பிடித்து கை, கால்களை கம்பியினால் கட்டி வாயை சலோரேப்பினால் ஒட்டியபோது அருகிலுள்ள வீட்டின் பெண் ஒருவர் கண்டு கூச்சலிட்டதையடுத்து மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் குறித்த பெண் சிறுகாயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதேச மக்கள் பெரும்அச்சமும் பீதியுமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை அக்கரைப்பற்றில் மர்மமனிதன் தொடர்பான சம்பவங்களின் போது பொலிசார் மீது கல்வீசி கலகம் விளைவித்ததாகக் கூறப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை இன்று பகல் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளானவரின் வீடு
சாகம வீதியில் நேற்று இரவு 12 மணியளவில் மர்மமனிதன் ஒருவரை பொதுமக்கள் துரத்திச் செல்லும்போது ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பியசேனாவின் வீட்டுக்கு அருகில் மர்மமனிதன் தப்பிச் சென்றுள்ளார். இதன் போது பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் காவல் கடமையில் ஈடுபட்ட பொலிசாருடன் ஏற்பட்ட கைகலப்பின்போது பொலிசார் மீது கல் வீசியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான யோ.உதயராஜ் என்பவரை பொலிஸார் இன்று பகல் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்






0 comments:
கருத்துரையிடுக