வெள்ளி, 21 அக்டோபர், 2011
வியாழன், 20 அக்டோபர், 2011
லிபிய ஜனாதிபதி கடாபி கொல்லப்பட்டார்? (படம் இணைப்பு)
லிபியா நாட்டின் ஜனாதிபதி கேர்ணல் கடாபி காயமடைந்த நிலையில் தற்போது உயிரிழந்தள்ளதாக அந்நாட்டின் இடைக்கால கவுன்சிலர் தெரிவி்த்துள்ளார். இன்னுமொரு தகவலின்படி காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்தத் தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையிலேயே கடாபி இரத்தக் கறையுடன் கூடிய இப்படம் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
செவ்வாய், 18 அக்டோபர், 2011
பாடசாலை மாணவி மர்மான முறையில் மரணம்

குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல, தக்மல்கொட மகா வித்தியாலய சாரணர் பிரிவிலிருந்து பயிற்சிக்காக ரன்டம்பே சென்ற 15 வயது மாணவி சந்தமாலி அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ரன்டம்பே பயிற்சின்போது இரவு ஓய்வறைகளில் தூங்கிக் கொண்டிருக்கும்போது மாணவிகள் அறையில் ஒரு சத்தம் கேட்டு அனைத்து மாணவிகளும் விழத்துக்கொண்டனர் சந்தமாலியைத் தவிர. களைப்பின் காரணமாக சந்தமாலி நன்றாகத் தூங்கியுள்ளார் என்று நினைத்த சக மாணவிகள் அவளைத் தொந்தரவு செய்யவில்லை.
எனினும், காலை விடிந்த பின்னரும் விளத்துக்கொள்ளாததைக் கண்டு சக தோழிகள் உடனேயே மேலதிகாரிக்கு அறிவி்த்துள்ளனர். எனினும் அவர்கள் எழுப்பும்போது சந்தமாலியின் உயிர் பிரிந்திருந்தது.
பயிற்சிக்குச் செல்ல முன்னர் வைத்திய அதிகாரிகள் மூலம் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு தேகாரோக்கியம் உள்ளவர் சந்தமாலி என்று நற்சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறான மாணவி தனது உயிரைவிடக் காரணம் என்ன...? இந்தக் கேள்விக்குறிக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
குருநாகல் துருவம் செய்தியாளர் பஹமுனை அஸாம்
விரைவில் பெற்றோலின் விலை அதிரிக்கக்கூடும்

உலக சந்தையில் பெற்றோலி்ன் விலை அதிகரித்திருப்பதனால் இலங்கையிலும் விரைவில் பெற்றோலின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அரசு தரப்பிலிருந்து செய்திகள் தற்போது கசிந்துள்ளன.
இவ்வருடம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 50 பில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலைமைகளைச் சமாளிக்கவுமே இலங்கையில் பெற்றோலின் விலை அதிகரிக்கப்படவுள்ளன. தற்போது ஒரு லீற்றர் பெற்றோல் 125 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.
குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்
செவ்வாய், 11 அக்டோபர், 2011
கல்முனையின் மேயர் பதவிக்கு அடிதடி
நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகரில் அமோக வெற்றியீட்டியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
அடுத்து கல்முனை மாநகர சபை மேயர் யார் என்பது பற்றி இன்று தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதற்கினங்க நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் 2ஆவதாக விருப்பு வாக்குகளைப் பெற்ற நிஸாம் காரியப்பரை தெரிவுசெய்ய கட்சி எத்தனித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சர்ச்சையி்ல் முடிந்த கட்சிக் கூட்டத்தில் யார் கல்முனை மேயர் என்று அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து நாளை (12.10.2011) மீண்டும் கட்சியின் உயர்பீடம் கூடி யார் மேயர் என்று அறிவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களில் இன்றிரவு வீதிகளில் மக்கள் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் வீதியில் டயர்களைப் போட்டும் எரித்துள்ளனர். அத்துடன் பஸ்களின் கண்ணாடிகளுக்கும் கல்லெறிந்துள்ளனர். இதனால் கல்முனை மாநகரம் அமளிதுமளிக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
கடந்த கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியையைக் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற முஹம்மட் ஸிராஸ் என்பவரை மேயராக பரிந்துரை செய்யவேண்டும். ஸிராஸுக்கே அதிகளவான ஆதரவு கல்முனையில் இருக்கின்றது. சிராஸ் 16,457 வாக்குகளையும், நிஸாம் காரியப்பர் 13,948 வாக்குளையும் பெற்றிருந்தனர். ஆனால், சில உட்பூசல்கள் காரணமாக அதற்கு அடுத்த நிலையிலுள்ள நிஸாம் காரியப்பரை மேயராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பெரிய குழப்ப நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
கல்முனையில் ஸிராஸுக்கு மேயர் பதவி வழங்கப்படாவிட்டால், நாளை கல்முனையில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பள்ளிவாசல்களில் இன்று மக்களை அமைதியாக இருக்குமாறு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை யார் கல்முனையின் மேயர் என்று தெரியவரும்.
செவ்வாய், 27 செப்டம்பர், 2011
வாஷிங்டன் நினைவு சின்னத்தினுள் பூகம்பம்

வாஷிங்டனிலுள்ள நினைவுச் சின்னத்தினுள் திங்கட்கிழமை பிற்பகல் பாரியளவிலான ஒலி எழும்பியுள்ளது. தேசிய பூங்கா சேவைப் பகுதியில் ஓகஸ்ட் 23 இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு்ள்ளது. 5.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட இந்தப் பூமி அதிர்ச்சியின்போது நினைவுச்சின்னம் உள்ளே இருந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டது.
தானியங்கி பாதுகாப்பு கமெராக்கள் மூலமாக இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன, இங்கு பார்வையிட வந்தவர்கள் மாடிப்படியிலிருந்து சறுக்கி விழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த நினைவுச் சின்னம் தற்போது மூடப்பட்டு புனரமைப்புச் செய்யப்படுகின்றது.
வியாழன், 15 செப்டம்பர், 2011
தினக்குரல் ஆசிரியர்பீடத்துக்கு இலவச சம்பளம் வழங்க உறுதி
வீரகேசரியின் நிர்வாகத்தின் கீழுள்ள ஏஷியன் மீடியா பப்ளிகேஷன் பிரைவேட் லிமிட்டட்டிலிருந்து கடந்த ஜூலை முதலாம் திகதி முதல் வெளிவந்த தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த 25 ஊழியர்கள் புதன்கிழமை காலை அலுவலகத்துக்கள் நழையவிடாது நிர்வாகத்தினரால் தடுத்த நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
தினக்குரலின் செய்தி ஆசிரியர், தினக்குரல் வார வெளியீடு பிரதம ஆசிரியர், உதவி செய்தி ஆசிரியர், சிரேஷ்ட உதவி ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். நிர்வாகத்தினரால் உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து இந்த ஊடகவியலாளர்கள் தமது நிலை குறித்து பொலிஸ் திணைக்களத்திடம் முறையிட்டனர். அத்துடன் கொழும்பு 15இல் உள்ள மோதரை தொழில் நிலையத்திடமும் முறையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட தினக்குரல் ஆசிரிய பீடத்தினரை தொழில் திணைக்களத்தின் கொழும்பு வடக்கிற்கு பொறுப்பான தொழில் ஆணையாளர் விக்கிரமசிங்க விசாரரைணக்கு அழைத்திருந்தார். அத்துடன் நிர்வாகத்தினரை விசாரணைக்கு அழைத்தபோது அவர்கள் சமூகம் கொடுக்கவில்லை. இதனையடுத்து தினக்குரல் ஆசிரியர் பீடத்தினரிடமிருந்து முறைப்பாட்டைப் பெற்றுக்கொண்ட உதவி ஆணையாளர் வியாழக்கிழமை 10.30 மணிக்கு நிர்வாகத்தினரை கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பணித்துள்ளார்.
அத்துடன் தொலைபேசி ஊடாக தினக்குரல் நிர்வாக இயக்குநர் P.கேசவராஜாவைத் தொடர்பு கொண்ட உதவி ஆணையாளர் தினக்குரல் ஊழியர்களிடம் இராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்குமாறு கோரமுடியாது எனத் தெரிவித்ததுடன் ஊழியர்களை உடனடியாக அலுவலகத்தக்குள் அனுமதிக்குமாறு கூறியபோதும் P.கேசவராஜா அதற்கு மறுத்துவிட்டார். ஏனெனில் இது வீரகேசரி நிர்வாகத்தின் முடிவு எனக் கூறிய அவர் அவர்களின் முடிவின்படியே தன்னால் செயற்படமுடியும் எனவும் கூறிவிட்டார்.
இலங்கையில் முதன்முதலாக ஒரு பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் நிர்வாகத்தினரால் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். ஊடகவியலாளர் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் இலங்கையிலுள்ள பல ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் தமது பூரண ஆதரவையும் தினக்குரல் ஊடகவியலாளர்களுக்கு வழங்கியுள்ளனர்.
தினக்குரல் ஊடகவியலாளர்கள் மீண்டும் அனுமதிக்கப்படாத பட்சத்தில் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு சிங்கள ஊடகவியலாளர்கள் உட்பட பொது அமைப்பபுகள் பலவும் முன்வந்துள்ளன. இச்சட்டவிரோதமான நடவடிக்கைக்கு இடம்கொடுத்தால் இலங்கையின் ஊடகவியலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே அமையும்.
இதையடுத்து இன்று வியாழக்கிழமை இரு தரப்பினருடனும் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு வருமாறு உதவி தொழில் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய தினக்குரல் ஆசிரியர்பீட உத்தியோகத்தர்கள் கொழும்பு தொழில் திணைக்களத்திற்கு ஆஜரானபோது அங்கு விசாரணைகள் இடம்பெற்றது.
அங்கு தினக்குரல் நிறுவுநர் எஸ்.பி. சாமி அவர்கள் தினக்குரல் ஆசிரியர்பீட உத்தியோகத்தர்களை புளூமென்டெல் தினக்குரல் அச்சகத்தில் சும்மா வந்திருக்குமாறும் அவர்களுக்கு சம்பளத்தொகையை வழமைபோல தருவதாகவும் கூறியுள்ளார். தொழில் திணைக்களம் எதிர்வரும் 21ஆம் திகதி இவர்களுக்கான காலக்கெடுவைக் கொடுத்துள்ளதாகவும் எமது துருவம் இணையத்தளத்துக்கு செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
19 அடி நீளமான நகமுடைய பெண் சாதனை
கிறிஸ் "டட்சஸ்" வால்டன் என்ற பெண்மணி சமீபத்தில் உலகின் மிக நீண்ட கைவிரல் நகமுடையவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். நகம் அவரது இடது கையில் 10 அடிக்கும் வலது கையில் 9 அடிக்கும் மேல் உள்ளன. சாதனை படைப்பது இப்போது சர்வசாதரணமாகிவிட்டது. இவரைப்பார்த்து மனதில் எழுந்த கேள்விகளில் சில...
01. எப்படி அந்த நீண்ட நகங்களை வைத்துக்கொண்டு தூங்கமுடியும்?
02. எப்படி கழிவறையில் நடந்துகொள்வார்?
03. சாப்பிட ஏதாவது மிசின் ஏதும் வைத்திருக்கிறாரா?
புதன், 14 செப்டம்பர், 2011
தினக்குரல் ஆசிரியர்கள் வெளியேற்றம்
இலங்கையின் முன்னணி செய்தித்தாள்களில் ஒன்றான தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர்பீட பணியாளர்கள் புதன்கிழமை வெளியேற்றப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய நிர்வாகத்தினர் (ஏசியன் மீடியா பப்ளிகேசன் நிறுவனம்) குறித்த பணியாளர்களை இன்று புதன்கிழமை காலை வெளியேற்றியதாகக் குறிப்பிடப்படுகிறது. இதனால் தினக்குரலை இவ்வளவு காலமும் வழிநடாத்திச் சென்ற ஆசிரியர்பீட பணியாளர்கள் வீதியில் நின்றதாகத் தெரியவருகின்றது.
இந்நிலையில் நிர்வாகம் மாறுகின்றதே தவிர ஆசிரியர் பீடத்தில் மாற்றமில்லை என ஆசிரியர் பீடத்தினர் முதலில் தெரிவித்திருந்தனர். ஆசிரியபீட பணியாளர்களை இராஜினாமா செய்வதற்கு புதிய நிர்வாகம் செவ்வாய்க்கிழமை வரை காலக்கெடு விதித்திருந்தது. குறித்த காலக்கெடுவிற்குள் தினக்குரல் பப்ளிகேசன் பிரைவேற் லிமிட்டெட்டிலிருந்து பதவி விலகாத காரணத்தினால் குறித்த ஆசிரியர்பீட பணியாளர் 25 பேரையும் இன்று புதிய நிர்வாகம் நிறுவனத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை.
இதனால் கொதிப்படைந்துள்ள உத்தியோகத்தர்கள் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது தினக்குரல் தினசரி மற்றும் ஞாயிறு வார இதழ் ஆகியவற்றில் பணியாற்றுபவர்களை இவ்வாறான நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தினக்குரல் பத்திரிகை வீரகேசரியின் ஆசிரியர்களால் வழிநாடாத்தப்பட்டு அங்கேயே அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றது. வீரகேசரிக்குப் போட்டியாக இருந்த பத்திரிகையை அந்நிறுவனமே பொறுப்பேற்று அதன் ஆசிரியர்களை இவ்வாறு நடுத்தெருவில் விட்டுவிட்டுச் செல்வது வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறான செய்திகளை இணையத்தளங்களில் பிரசுரித்தால் தினக்குரல் நிர்வாகம் "தினக்குரலின் வளர்ச்சிப் போக்கை சகிக்கமுடியாத பிரகிருதிகள்தான் இவ்வாறான விசமத்தனமான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். இதனை வாசகர்கள் நம்பவேண்டாம்" என்றுதான் அறிக்கை விடுகிறார்களே தவிர அதன் வெளிப்படைத்தன்மை பற்றி விளக்கமளிப்பதாகத் தெரியவில்லை.
ஆசிரியர்களின் வெளியேற்றம் சம்பந்தமாக துருவம் இணையத்தளத்துக்காக தினக்குரல் உதவி ஆசிரியர் ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, தற்போது பிரதம ஆசிரியருடன் தற்போது இரு ஆசிரியர்கள் மட்டுமே நிறுவனத்துக்குள் இருப்பதாகவும், ஏனையவர்கள் வீதியில் நிற்பதாகவும் தெரிவித்தார் ஏமாற்றப்பட்ட தொனியில்....
செவ்வாய், 13 செப்டம்பர், 2011
தினக்குரல் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்
தினக்குரல் ஆசிரியபீட ஊழியர்கள் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்திருப்பதுடன் இன்னும் இரண்டொரு தினங்களில் கொழும்பு தொழில் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் ஆகியவற்றையும் மேற்கொள்ளவுள்ளனர்.
சட்ட விரோதமான முறையில் தினக்குரல் ஊழியர்களை நிறுவனத்திலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்குமாறு அழுத்தம் கொடுத்துவந்த தினக்குரல் நிர்வாகம் அவ்வாறு ராஜினாமா கடிதங்களை கொடுக்காத 30 ஊழியர்களை நிறுவனத்துக்குள் வர முடியாது என இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளதையடுத்தே தினக்குரல் ஆசிரிய பீட ஊழியர்கள் வேலை பகிஸ்கரிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதன் காரணமாக வீரகேசரி ஆசிரிய பீட ஊழியர்களை நாளையஇன்றை தினக்குரல் பத்தரிகையின் பதிப்பினை வெளியிட நடவடிக்கை எடுத்து, இன்றைய செவ்வாய் தினக்குரல் பத்திரிகை வீரகேசரி ஆசிரியர்களைக் கொண்டே வெளிவந்துள்ளது. இன்றைய தினக்குரலின் ஆசிரியர் தலையங்கமும் வீரகேசரி ஆசிரியர்களாலேயே எழுதப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினக்குரல் நிறுவனத்தை கொள்வனவு செய்த வீரகேசரி நிறுவனம் தினக்குரல் பத்திரிகையை யூன் 30ஆம் திகதியிலிருந்து அதனை அச்சிட்டு வருகிறது. ஆனால் தினக்குரல் நிறுவனத்திலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே வீரகேசரி நிறுவனத்தினால் நியமன கடிதம் வழங்கப்படும் என்ற நிபந்தனையை வீரகேசரி நிறுவனம் விதித்திருக்கிறது.
தினக்குரலை சிறிது காலத்தில் மூடுகின்ற சந்தர்ப்பத்தில் தினக்குரல் ஊழியர்களுக்கு பெரும் தொகை நஷ்ட ஈடு வழங்க வேண்டி இருக்கும் என்பதாலேயே முன் எச்சரிக்கையாக அவர்களிடம் இருந்து ராஜினாமா கடிதங்களை பெறுவதில் நிர்வாகம் உறுதிக்க இருந்து வருவதாக தெரியவருகிறது. தினக்குரல் ஆசிரியர் வி.தனபாலசிங்கத்தை ஓய்வுபெறுமாறு நிர்வாகம் நிர்ப்பந்தம் கொடுத்துவருவதும் தெரிந்ததே.
இதேசமயம் தினக்குரல் ஆசிரிய பீட ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் சுதந்திர ஊடகவியலாளர் சங்க பிரதிநிதிகள் இன்று திங்கட் கிழமை தினக்குரல் ஆசிரிய பீட ஊழியர்களை சந்தித்து தமது ஆதரவினை வழங்கியிருப்பதுடன் எதிர்கால போராட்டங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.
தமிழ் மக்களின் விடுதலை போராட்டம் முக்கிய காலகட்டத்தில் இருந்த வேளை அப்போது ஒரேயொரு தேசிய தமிழ் பத்திரிகையாக இருந்த வீரகேசரி போராட்டத்திற்கான ஆதரவான போக்கினை கொண்டிராமையினால் அதிருப்தியுற்ற சில பத்திரிகையளர்கள் வீரகேசரியில் இருந்து வெளியேறி எஸ்.பி. சாமியின் ஆதரவுடன் தினக்குரல் பத்திரிகையினை ஆரம்பித்திருந்தனர்.
ஆனால் தற்போது வெறுமனே இலாப நோக்கத்திற்காக பல கோடி ரூபாய்களுக்கு தினக்குரல் பத்திரிகையை விற்று பெரும் தொகை பணத்தை சம்பாதித்துள்ள எஸ்.பி. சாமி அத்தனை பத்திரிகையளர்களையும் தற்போது நடுத்தெருவில் கைவிட்டுள்ளார்.
எனவே இது தொடர்பில் தமிழ் சமூக தலைவர்கள் தமது கண்டனத்தை தெரிவிப்பதுடன் இது விடயத்தில் தலையீடு செய்ய வேண்டும் என்றும் கொழும்பு தமிழ் ஊடகத்துறை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
அத்துடன் தினக்குரல் பிரதம ஆசிரியர் உதவி ஆசிரியர்கள் தினக்குரல் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. தினக்குரல் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம் உட்பட செய்தி ஆசிரியர் ஹரன், உதவி ஆசிரியர்கள், உட்பட 25க்கும் மேற்பட்ட ஆசிரியபீட உறுப்பினர்களையும் இம்மாதம் 14ஆம் திகதியிலிருந்து தினக்குரல் நிறுவனத்திற்குள் பிரவேசிக்க முடியாது என தினக்குரல் வெளியீட்டு நிறுவனத்தை வாங்கி வீரகேசரி நிறுவனம் தற்போது உருவாக்கியிருக்கும் ஏசியன் மீடியா பப்ளிகேசன் நிறுவனம் அறிவித்துள்ளது.
தினக்குரலின் ஏனைய பிரிவு ஊழியர்கள் இராஜினாமா கடிதங்களை வழங்கிய போதிலும் ஆசிரிய பீட ஊழியர்கள் இராஜினாமா கடிதங்களை வழங்க மறுத்து வந்தனர். தாம் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து இராஜினாமா செய்ய முடியாது என மறுத்து வந்தனர். இந்நிலையில் 14ஆம் திகதி முதல் தினக்குரல் நிறுவனத்திற்குள் பிரவேசிக்க கூடாது என வீரகேசரி நிறுவனமான ஏசியன் மீடியா நிறுவனம் அறிவித்தல் ஒன்றை தினக்குரல் அலுவலக அறிவித்தால் பலகையில் போட்டுள்ளனர்.
இது தொடர்பாக தினக்குரல் ஆசிரிய பீடத்துடன் நாம் தொடர்புகொண்டு கேட்டபோது; இந்த அறிவித்தலை கண்டு தாம் அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருப்பதாகவும், இதனால் இன்றிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் ஆசிரிய பீட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தாம் செவ்வாய் தினக்குரல் பத்திரிகையை வெளியிடப்போவதில்லை என்றும் அவ்வாறு நாளை தினக்குரல் வெளிவருமாக இருந்தால் அது வீரகேசரி நிறுவனமே வெளியிடும் என்றும் தினக்குரல் ஆசிரிய பீட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
புதன், 7 செப்டம்பர், 2011
தினக்குரல் பத்திரிகை மூடப்படப்போகின்றதா?
தினக்குரல் பத்திரிகை மூடப்பட உள்ளதுடன் அதில் பணியாற்றிய சுமார் 180 ஊழியர்களும் நிர்க்கதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அண்மையில் வீரகேசரி நிறுவனம் தினக்குரல் வெளியீட்டு நிறுவனத்தின் 55 வீதத்திற்கும் மேற்பட்ட பங்குகளை கொள்வனவு செய்ததை தொடர்ந்து இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தினக்குரல் பத்திரிகையை வெளியிட்டு வந்த தினக்குரல் வெளியீட்டு நிறுவன அங்கு பணியாற்றும் 180 ஊழியர்களில் 150 ஊழியர்களிடமிருந்து இராஜினாமா கடிதங்களை பெற்றுள்ளனர். ஆசிரியர் பீடத்தை சேர்ந்த 25 பேரும் மேலும் 5 பேருமாக சுமார் 30 பேர் மட்டுமே இராஜினாமா கடிதங்களை வழங்காமல் உள்ளனர்.
இதேவேளை, புதிய நிறுவனத்தில் இணைந்து கொண்டமைக்கான நியமனக் கடிதங்கள் எதுவும் கொடுக்கப்படாத நிலையில் தினக்குரல் நாளேட்டின் பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் பதவி விலக வேண்டுமென தினக்குரல் நிறுவன முகாமைத்துவம் வற்புறுத்தியுள்ளது.
தனபாலசிங்கத்தின் வீட்டு தொலைபேசியில் தொடர்புகொண்ட தினக்குரல் நிறுவன முகாமைத்துவம் 55 வயது சென்றமையினால் பதவி விலகவேண்டும் எனக் கோரியுள்ளது. ஆனால், ஆசிரியர் தனபாலசிங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் எந்த நிறுவனத்தில் இருந்து பதவி விலகுவது என கேள்வி எழுப்பியுள்ளார்.
தினக்குரல் பப்பளிகேஸன் பிரைவேட் லிமிட்டெட் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பித்து இந்த ஆண்டு மே மாதம் வீரசேகசரி நாளேட்டை வெளியிடும் எக்ஸ்பிரஸ் சிலோன் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தக்கு விற்பனை செய்துள்ளது.
இதனால் கடந்த யூன் மாதம் முதல் ஏசியா மீடியா பப்ளிகேஸன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினக்குரல் பப்பளிகேஸன் பிரைவட் லிமிட்டட் என்ற பெயரின் தினக்குரல் நாளேடு வெளிவந்தபோது பணியாற்றிய ஊழியர்கள் புதிய நிறுவனத்தில் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றனர்.
எனினும் தினக்குரல் பப்பளிகேஸன் பிரைவட் லிமிட்டெட்டில் பணியாற்றிய ஊழியர்கள் பதவி விலகல் கடிதங்களை கையளிக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் வாய்மொழி மூலமாக வற்புறுத்தியுள்ளனர். அவ்வாறு பதவி விலகல் கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் மாத்திரமே ஏசியா மீடியா பப்ளிகேஸன் நிறுவன கடிதத்தலைப்பில் புதிய நியமன கடிதங்கள் கையளிக்கப்படும் என பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் இந்த மாதம் முதலாம் திகதியுடன் 55 வயதை பூர்த்தி செய்துள்ளார். அதனால், அவர் பதவி விலகவேண்டும் என ஏசியா மீடியா பப்ளிகேஸன் நிறுவனம் கேட்டுள்ளது. ஆனால், நியமனக்கடிதம் இல்லாமல் எவ்வாறு பதவி விலகுவது என்றும் தினக்குரல் பப்பளிகேஸன் பிரைவட் லிமிட்டட் விற்பனை செய்யப்பட்டு அந்த நிறுவனம் மூடப்பட்டமை தொடர்பாகவோ அல்லது அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது அதில் இருந்து நீங்கள் விலகுங்கள் என்று உத்தியோகபூர்வமாகவோ அறிவிக்காத நிலையில் எந்த நிறுவனத்தில் இருந்து தான் விலகுவது என தனபாலசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினக்குரல் பப்பளிகேஸன் பிரைவேட் லிமிட்டெட்டில் இருந்து ஏசியா மீடியா பப்ளிகேஸன் ஆக மற்றமடைந்த பின்னரும் தான் பிரதம ஆசிரியராக தினக்குரல் நாளேட்டில் கடமையாற்றியதாகவும் சுட்டிக்காட்டியுள்ள தனபாலசிங்கம் இது ஒரு சட்டப் பிரச்சிணை என்றும் கூறியுள்ளர்.
இதேவேளை, தங்களுக்குரிய ஊழியர் சேமலாப நிதிகள் ஊழியர் நம்பிக்கை நிதிகள் எதுவும் தொழில் திணைக்களத்தக்கு சட்ட ரீதியாக செலுத்தப்படாத நிலையில் தினக்குரல் பப்பளிகேஸன் பிரைவேட் லிமிட்டெட் ஏசியா மீடியா பப்ளிகேஸனாக எவ்வாறு மாற்றமடையும் என கேள்வி எழுப்பியுள்ள ஊழியர்கள் இது தொடர்பாக தொழில் திணைக்களத்துக்கு முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய முக்கியஸ்தர்களுடன் நாம் தொடர்புகொண்டு இப்பிரச்சினையில் அங்கு பணியாற்றும் ஊடகவியலாளர்களின் தொழில் பாதுகாப்பிற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா என கேட்ட போது; தமது சங்கம் ஒரு தொழிற்சங்கம் அல்ல என்றும் எனினும் தொழிற்திணைக்களம் மற்றும் ஏனைய ஊடக அமைப்புக்களுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கான தொழில் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம் என தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அங்கு பணியாற்றிய ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ''ஆசிரியர் பீடம் தவிர்ந்தவர்களில் அனேகமானோர் தங்களது இராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர். நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் எங்களிடம் கடிதங்களை கேட்டு வாங்கினர். முன்னர் இருந்த நிறுவனம்தான் இப்போது பெயர் மாறுகின்றது. அதற்கு ஏன் இராஜினாமா கடிதம் கொடுக்கவேண்டும்? என்பதே எமது கேள்வி. இதில் ஏதோ உள்குத்து இருக்கின்றது.''
இன்னொருவர் கருத்து தெரிவிக்கும்போது, எங்களிடம் இராஜினாமா கடிதம் வாங்கிட்டு புதிய நிறுவனமான ஏசியன் மீடியா (பிரைவேட்) லிமிட்டெட் என்ற நிறுவனத்தில் இணைந்துகொண்டதாக கடிதம் தந்தார்கள். என்ன நடக்கிறது என்றுதான் தெரியல என்றார்.
அத்துடன் தற்போது தினக்குரல் நிர்வாகக் குடும்பத்தினர் இந்தியா சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரியர் பீடத்தினர் கடிதம் கொடுப்பதில்லை என்ற உறுதியில் உள்ளனர். இவர்களில் அனேகமானோருக்கு குழப்பமே எஞ்சியுள்ளது. சரியான தகவலை நிர்வாகம் வழங்காமல் இவ்வாறு நடந்துகொள்வது ஊழியர்களிடையே சந்தேகத்தையே எழுப்புகின்றது.
அத்துடன், இன்றைய தினக்குரலின் முன்பகத்தில் இதனை மறுப்புத் தெரிவித்து செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் தினக்குரலை கே.பி. வாங்கப்போவதாக இணையத்தில் செய்தி வெளியாகியிருந்தது. பின்னர் வீரகேசரிக்கு உரிமம் மாறியது. அப்போதும் பத்திரிகையி்ல் மறுப்புத் தெரிவித்து ஆசிரியர் தலையங்கமும் தீட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011
தென்கிழக்கில் சூடுபிடிக்கும் நோன்புப் பெருநாள் வியாபாரம்
எஸ்.எம்.எம்.றம்ஸான், எஸ்.எல். மன்சூர்
கடந்த சில வாரங்களாக மர்ம மனிதன் சர்ச்சையைத் தொடர்ந்து வியாபாரம் மந்த நிலையில் காணப்பட்ட போதிலும் தற்போது அவ்வச்சம் ஓரளவுக்கு நீங்கியதையடுத்து மக்கள் பிரதான வீதியிலும் மற்றும் உள்ளுர் கடைகளிலும் புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நோன்பு காலம் முடிவுறும் நிலையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இரவு காலங்களில் மக்கள் உடுப்புக்களை வாங்குவதில் இரவு 12.00 மணிவரையும் புடவைக் கடைகளில் மக்களைக் காணக்கூடியதாக இருந்தது. அப்பாடா பயப்பீதி மட்டும் ஓய்ந்து விட்டதே என்கிற கவலையின்றி மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்கள் இராக்காலம் பகற்காலங்கள்போல் தோற்றமளிப்பதையும் தற்போது காணக்கூடியதாக இருக்கிறது.
இதேவேளையில் வெளியூர் அங்காடி வியாபாரிகள் மர்ம மனிதன் தொடர்பான பிரச்சினையால் இப்பகுதிக்கு வியாபாரத்திற்காக வருகைதர பயந்திருந்தவர்களும் தற்போது தமது வியாபாரத்தை மேற்கொள்வதைக் காணக்கூடியதாக உள்ளது.
கல்முனையில் அரசாங்கத்தை எதிர்த்து முஸ்லிம் காங்கிரஸ்
எஸ்.எம்.எம்.றம்ஸான்
அரசாங்கத்ததோடு இணைந்திருக்கும் நாங்கள் அரசாங்கத்தை எதிர்த்தது கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்கு அம்பாறை கச்சேரியில் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு ஊடகங்களுக்க கருத்துத் தெரிவிக்கும்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹஸன்அலி மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்; இத்தேர்தலை நேசசக்தியோடுதான் நடாத்தவுள்ளோம் எமது பிரச்சாரங்கள் கூட எதிர்கால இனப்பிரச்சினை தொடர்பாகவே பெரும்பாலும் அமையும். நாங்கள் 7 மாநகர சபையில் தனித்தும் அரசாங்கத்துடன் சேர்ந்தும் போட்டியிடுகிறோம். ஆனால் கல்முனை மாநகரசபையில் தனித்துத்தான் போட்டியிடுகிறோம் இதனால் இத்தேர்தலில் ஆரோக்கியமான பிரச்சாரங்களை மேற்கொண்டு அமைதியான நல்லதோர் தேர்தலை நடாத்துவதற்காகவே களமிறங்கியுள்ளோம். என்றார்.
கல்முனை மாநகர சபையை மீண்டும் உங்களது கட்சி கைப்பற்றுமா? என வினவியபோது…
நிச்சயமாக வெற்றி பெறுவோம் ஏனெனில் கடந்தகாலங்களில் மக்கள் எமது கட்சிக்கு அளித்த வாக்குகள் மற்றும் ஆதரவுகளின் பிரதிபலனாக நிச்சயமாக நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றதுடன் நல்ல மிகவும் திறமையான வேட்பாளர்களை இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தும் உள்ளோம் என்றார்.
மேயராக உங்கள் கட்சியினால் குறித்த வேட்பாளர் ஒருவரை அடையாளப் படுத்தியுள்ளீர்களா? எனக்கேட்க...
இல்லை. ஆனால் அதை கட்சி தீர்மானிக்கும் எனக் கூறினார்.
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மக்கள் தரிப்பிடம்
எஸ்.எம்.எம்.றம்ஸான்
நீண்டகால காலமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இருந்து வந்த மக்களின் தற்போது நிறைவேறியுள்ளது. மேற்படி வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை நோயாளிகளைப் பார்வையிட வெளி இடங்களில் இருந்து வருவோர் தங்குவதற்கு அல்லது உரியநேரம் வரும்வரை காத்திருப்பதற்கு ஓர் இடம் இல்லாமல் மக்கள் பாரிய சிரமங்களை இவ்வளவு காலமாகவும் எதிர் நோக்கி வந்தனர்.
அதனை ஓரளவுக்கு நிறைவேற்றும் நோக்கோடு இன்று மாலை பெண் பார்வையாளர்களுக்கு மட்டும் ஏற்றவாறு மக்கள் தரிப்பிடம் ஒன்றை வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் ஏற்பாட்டில் புணரமைக்கப்பட்ட மக்கள் தரிப்பிடத்தை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எம்.நஸீர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
21 நாட்களுக்குள் அகிம்சைப் போராட்டம் - பட்டதாரிகள்
எஸ்.எம்.எம்.றம்ஸான்
சனிக்கிழமை (2011.08.27) அன்று சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் அகில இலங்கை பொது ஊழியர் முன்னணியும் தொழில்ரீதியாக தகுதிவாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமாப் பட்டதாரிகளின் தொழிற்சங்கமும் இணைந்து நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள்.
வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைகளுக்கான தீர்வு:
01. நாடு பூராகவும் வேலையற்றிருக்கம் பட்டதாரிகளுக்கு அவர்களின் கஷ்டநிலையினை கருத்தில் கொண்டு துரிதமாக நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளல்.
02. 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐந்தாறு வருடங்களாக வேலையற்றிருக்கும் பட்டதாரிகள் பெற்றோரில் தங்கி வாழ்கின்றார்கள். இதனைக் கருத்திற் கொண்டு 2005ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனத்தைப் போன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
03. விஷேடமாக வடகிழக்கிலுள்ள பட்டதாரிகள் பல இன்னல்களுக்கு மத்தியில் மன நிலை பாதிக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள். ஆகையால் வடகிழக்கிலுள்ள பட்டதாரிகளின் நியமனத்தை முன்னுரிமைப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள ஆவணைசெய்ய வேண்டுமம்.
04. வேலையற்றிருக்கும் பட்டதாரிகள் தொடர்பாக ஏனைய மாகாணங்களில் நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதைப் போன்று கிழக்கு மாகாண சபையிலும் வடக்கு அரச நிர்வாகத்தினாலும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள பணிப்புரை செய்ய வேண்டும்.
05. மக்கள் சபைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு 2 வருடங்களை எட்டி நிற்கின்றது அதுமாத்திரமன்றி இரண்டு முறை நேர்முகப் பரீட்சைக்காக அனுப்பட்ட கடிதங்கள் இடைநிறுத்தப்பட்டமையினால் பட்டதாரிகள் மனவேதனையடைந்து காணப்படுகின்றார்கள்.
06. பட்டதாரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் பொழுது அரச வயதெல்லையான 45 வயதை கட்டாயமாக கருத்தில் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
07. ஒழங்கமைக்கப்பட்ட அடிப்படையில் நியமனம் வழங்ககுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதாவது அவர்கள் பட்டம் பெற்ற ஆண்டடிப்படையில் நியமனம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டம்.
08. 2005ஆம் ஆண்டு கௌரவ ஜனாதிபதி அவர்கள் பிரதமராக இருக்கும் போது நேர்முகப் பரீட்சை மூலம் நியமனம் வழங்கப்பட்டன. அதே வழிமுறை பின்பற்றப்பட வேண்டும்.
09. அதுமாத்திரமன்றி பட்டதாரிகளுக்கு பரீட்சைகளை நடாத்தி காலம் கடத்துவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10. வடகிழக்கிலுள்ள ஊனமுற்ற பாதிப்படைந்த 45 வயதை தாண்டும் வயதுள்ள பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
11. அகதி முகாம்களில் மாத்திரமன்றி விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற வடகிழக்கிலுள்ள பட்டதாரிகளுக்கு உரிய நடவடிக்கைகளின் மூலம் நிவாரணம் வழங்குதல் வேண்டும்.
12. கிழக்கு மாகாணத்திற்கும் வடமாகாண நிர்வாகத்திற்கும் பட்டதாரிகள் தொடர்பாக உடன் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரமளிக்கப்ட வேண்டும்.
13. வடகிழக்கிலுள்ள நிர்வாக வெற்றிடங்களை பட்டதாரிகளைக் கொண்டு நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
14. வருடந்தோறும் பல்கலைக்கழகங்களிலிருந்தும் உயர்கல்வி நிறுவனங்களிலிருந்தும் வெளியாகும் பட்டதாரிகளுக்கு வருடாவருடம் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்பது போன்று கல்வி கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
15. துறைசார்ந்த தொழிநுட்பவியல் பட்டங்களைப் பெற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கும் துரித முறைமையொன்று பின்பற்றப்படல் வேண்டும்.
16. திட்டமிட்டவாறு 15000 பட்டதாரிகளுக்கு உடன் விண்ணப்பம் கோரப்பட வேண்டும்.
17. ஜனாதிபதியினால் வடகிழக்கு மாகாண சபைக்கு இருக்கும் வெற்றிடங்கள் உடன் நிரப்புவதற்கு பரிந்துரைகள் செய்யப்பட வேண்டும்.
18. இன்றைய தினத்தில் (27.8.2011) இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் கோரப்படாவிட்டால் அகிம்சை போராட்டம் ஆரம்பமாகும்.
19. நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு சேவை குறிப்பை துரிதமாக வெளியிடுதல் வேண்டும்.
20. பட்டதாரிகளுக்கு தனியான சேவைகள் வடிவமைக்கப்பட வேண்டும்.
21. கௌரவ ஜனாதிபதி அவர்கள் பட்டதாரிகளுக்கான விபரக் கோவை கோரியது கோட்டாக்களாக மாறிவிடுகின்றது. உடன் நிறுத்தப்படு விண்ணப்பம் கோரப்பட வேண்டும்.
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011
ஆசிரியர் இடமாற்றங்கள் நடைபெறும் விதம் குறித்து கவலை
கிழக்கு மாகாண செய்தியாளர்:
ஆசிரியர்களது இடமாற்றம் சம்பந்தமாக அண்மைக்காலம் வரை பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை வலயங்களிலுள்ள பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வேறு வலயங்களுக்கு கடந்தகாலங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது எதிர்வரும் ஆண்டுக்கான ஆசிரியர்களைச் சமப்படுத்தல் வேலைகள் கல்வி வலயங்கள் தோறும் நடைபெற்று வருவதாகத் தெரியவருகிறது. இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் தாங்கள் கற்பித்த பாடசாலைகளின் தரத்திற்கும் மற்றும் வசதிக்கேற்பவும் புள்ளிகளின் அடிப்படையில் இடமாற்றங்கள் நடைபெறுவதற்கான புதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இதற்கிடையில் சில பாடசாலைகளில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்கள் வயதானவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் வசதியான பாடசாலைகளில் நீண்டகாலம் சேவையாற்றி வருகின்றனர். இவர்களை நிச்சயமாக இடமாற்றியே ஆகவேண்டும். இந்த வயதான காலத்தில் இடமாறிச் சென்று அல்லது தூரப்பிரதேசத்திற்குச் சென்று எவ்வாறு சரியான கற்றல் கற்பித்தலை மேற்கொள் முடியும்? எனவும் சில முதிர்ந்த ஆசிரியர்கள் கூறுகின்றனர். எது எப்படியிருப்பினும் இடமாற்றம் என்பது கட்டாயம் நடைபெற்றே ஆகவேண்டும். இனிவரும் காலங்களில் புதிதாக கல்விப்புலத்தில் இணையும் ஆசிரியர்களை குறிப்பிட்ட காலப்பகுயில் தூரப்பிரதேசங்களுக்கு நியமனம் செய்கின்றபோது இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட இடமிருக்காது என மூத்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை, புதிதாக நியமனம் கிடைத்தவுடன் அரசியல்வாதிகளின் துணையுடன் தனது சொந்த வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டவர்களும் உண்டு. சில ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றபோது பின்தங்கிய பாடசாலைகளுக்கே விரும்பிச் செல்கின்ற நிலையும் காணப்படுகிறது. இதற்கான காரணம் பின்தங்கிய பாடசாலைகளுக்கான விசேட கொடுப்பனவை பெற்றுக் கொள்ளும் நோக்குடனே செல்வதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறாக பின்தங்கிய பிரதேசத்தினை வசிப்பிடமாகக் கொண்ட ஆசிரியர்கள் அங்குள்ள பாடசாலைகளில் கற்பித்துவிட்டு விசேட கொடுப்பனவை பெறுகின்ற ஒருநிலையும் காணப்படுகிறது.
அதேவேளை இவ்வாறான ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்கின்றபோது பின்தங்கிய பிரதேச விசேட கொடுப்பனவு வழங்கப்படுகின்ற பாடசாலைகளுக்கே செல்வதில் ஆர்வமுள்ளவராகவும் காணப்படுகின்றனர். ஏதிர்காலத்தில் அமையவுள்ள இடமாற்றங்களின் போது இந்த விடயங்களையும் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மாகாண அமைச்சு மட்டத்தில் நடவடிக்ககை எடுப்பது நல்லது. எனவேதான் அனைத்து ஆசிரியர்களும், அனைத்துப் பிரதேச பாடசாலைகளிலும் தமது கற்பித்தலை மேற்கொள்ள சித்தமாய் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டுமென பெற்றோர்கள் தெரிவிக்கின்றர்.
வியாழன், 25 ஆகஸ்ட், 2011
அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம்
முதன்முதலாக அமையவுள்ள இலங்கையின் தொழில்நுட்ப பூங்காவனம் அம்பாந்தோட்டையில் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அமையப் பெருகின்ற பாரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்குள் இரண்டு பல்கலைக்கழங்களில் சுமார் 5000 மாணவர்கள் கல்வி பயில்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படவிருக்கின்றது. சிங்கப்பூர், மற்றும் இந்திய நிறுவனங்களின் ஒத்துழைப்பும், இ.ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும் என்று இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ அவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்தப் பூங்கா அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இப்பூங்காவில் தகவல் தொழில்நுட்ப வணிக செயற்பாடுகளை வெளியகப்படுத்துதல் தொழில்களை இலகுவாகக் கொண்ட சில நிறுவனங்களும் இங்கு அமைக்கப்படுவதுடன், கணினிகளின் பாகங்களைக் கொண்டு புதிய கணினிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றும் அமையப்பொறுவதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறான திட்டங்கள் எதிர்காலத்தில் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் அமையுமாக இருந்தால் யுத்தத்தால் நிலைகுலைந்போன இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் வெளியுலகத்தினை சரியான புரிந்துணர்வோடு நடந்து எதிர்கால புத்திஜீவிகளாக உருமாற்றம் பெற உதவும் அல்லவா?
புதன், 24 ஆகஸ்ட், 2011
வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது
கிழக்கில் நடமாடிவந்த கிறீஸ் மனிதன் தற்போது வடக்கிலும் பிரசன்னமாகி மக்களை அச்சுறுத்தி வருகின்றான். இதனால் பீதியில் உறைந்துபோயிருக்கம் மக்களில் சிலர் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். இன்னும் சிலர் வெளியில் வருவதற்கே அஞ்சுகின்றனர். வவுனியாவில் கிறீஸ் மனிதனின் பீதி கிளம்பியுள்ளதால் தற்போது பொலிஸார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஒரு இடத்தில் இருவருக்குமேல் கூடிநின்று பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர்.
கிறீஸ் மனிதன் என்ற பெயரில் அச்சுறுத்தி வருபவர்களைக் கண்டறிய பொலிஸார் இது சம்பந்தமான துண்டுப் பிரசுரங்களையும விநியோகித்துவருவதாக எமது செய்தியாளர் தெரிவி்த்தார். வவுனியா மின்சார சபை ஒழுங்கையில் வைத்து இவ்வாறு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஒழுங்கையில் காதல் ஜோடிகள் சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது.









































