துறைநீலாவணையில் அண்மையில் இரவு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில், மர்ம மனிதர்களைத் துரத்திச் சென்றபோது அவர்கள் பொலிஸ் சோதனைச் சாவடிக்குள் ஓடியதாக கூறி பொதுமக்கள் பொலிஸ் சாவடி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்விடத்துக்கு படையினர் வரவே பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
மர்ம மனிதனைத் துரத்தியதால் படையினரால் தாக்கப்பட்ட ஒருவர்
அதன் பின்னர் வயல்வேலை செய்துவிட்டு வந்தவர்கள், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் வேறு வீடுகளில் படித்துவிட்டு வீதியால் வந்தவேளையில் இரவு 10.30 மணியளவில் சீருடையில் வந்த படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் முதுகுப் பகுதிகளில் பலத்த காயங்கள் உள்ளன. மோட்டார் சைக்கிள் செயின்களாலும், தடிகளாலும் தாக்கப்பட்டுள்ள நிலையில் இருந்த இளைஞர்கள் மூவரையும் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசாவும், பா.அரியநேத்திரன் அவர்களும் இன்று காலை களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதேவேளை கல்முனை அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கல்முனை பொலிஸ் நிலையத்தின் சோதனைச் சாவடி மீது கல்வீச்சில் ஈடுபட்டதாகக் கூறி இன்று காலை 4 இளைஞர்களை கல்முனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களின் கைது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரைச் சந்தித்து பேசியபோது, கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அதன் பின்னரே அவர்களை விடுவிக்க முடியும் எனவும் தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் கிண்ணியாவிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிண்ணியா பிரதேச செயலகத்தை தற்போது பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை இன்று திங்கட்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளது. இன்றையதினம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் 5 பேர் உட்பட 24 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே பொதுமக்கள் கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட வண்ணமுள்ளனர்.
கிண்ணியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. இந்த நிலையில், பிரதேச செயலகத்திலுள்ள அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா மற்றும் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஆகியோர் உட்பட அங்குள்ள அலுவலர்கள் வெளியேறமுடியாதவாறுள்ளனர்.
அண்மையில் சாய்ந்தமருதில் வைத்து மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தில் பிடிக்கப்பட்ட இரு நபர்களை கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததை தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது கல்முனை நகரில் வைத்து கற்களால் வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். தேவேளையில் பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாட் மற்றும் சமூகப் பெரியார்கள், இராணுவ அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸார் ஆகியோர்களுக்கிடையே சந்திப்பொன்று நடைபெற்றது.
பிடிக்கப்பட்ட மர்ம நபர்கள் என சந்தேகிக்கப்படுவோரில் ஒருவர் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள உருக்கு ஒட்டுத் தொழிற்சாலையில் கடந்த 5 வருடங்களாக பணியாற்றுபவர் என்றும் மற்றைய நபர் அவரை சந்திப்பதற்காக பாணமை பிரதேசத்திலிருந்து வருகை தந்த அவரின் உறவினரான கடற்படை உத்தியோகத்தர் எனவும் தெரியவந்தது. இதனை மேற்படி கலந்துரையாடலில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிக் கூடியிருந்த மக்களுக்குத் தெளிவுபடுத்தியபோதும் அதனைப் பொருட்படுத்தாத சிலர் வன்முறையில் ஈடுபட்டதனை அடுத்து இராணுவத்தினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மற்றுமொரு சம்பவத்தில் நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டம் பெரிய போரதீவுப் பகுதியில் வைத்து 19 வயதுடைய இளம் யுவதியொருவர் மர்ம மனிதரால் தாக்கப்பட்டு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.








0 comments:
கருத்துரையிடுக