மட்டக்களப்பு நாவற்குடாவில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மர்மனிதன் காதலியை தேடிச்சென்ற அப்பாவி இளைஞன் என தெரியவந்துள்ளது. புத்தளத்தை முந்தளம பிரதேசத்தை சேர்ந்த முகம்மட் சிபான் முகம்மட் நளீர் என்ற 23 வயது முஸ்லிம் இளைஞர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. திருகோணமலையில் ஐஸ் தொழிற்சாலையில் வேலை செய்யும் இவர் தன்னுடன் வேலை செய்த நாவற்குடாவை சேர்ந்த தமிழ் யுவதியான தன் காதலியின் வீட்டை தேடி சென்ற போதே இந்த பரிதாப நிலைக்கு உள்ளானார்.
இவர் நாவற்குடாவில் உள்ள தன் காதலியான தமிழ் யுவதியை தேடி சென்றதாகவும், ஊருக்கு புதியவரான அவர் தனது காதலி இருக்கும் வீதியின் பெயரை கூறி அது எங்கே இருக்கிறது என வீதியால் சென்ற ஆசிரியை ஒருவரிடம் கேட்ட போது அந்த ஆசிரியை பதறி அடித்துக்கொண்டு மர்ம மனிதன் என கூக்குரல் இட்டதாலேயே இந்த விபரீதம் நடந்ததாக தெரியவருகிறது.
அந்த வழியால் வந்த காத்தான்குடியைச்சேர்ந்த இரு முஸ்லீம் நபர்கள் அவரை துரத்திச்சென்று மடக்கி பிடித்து நாவற்குடாவில் உள்ள பொதுமக்களிடம் கொடுத்தனர்.
நாவற்குடா பொது விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இவர் அங்கு கூடிய மக்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.
நாவற்குடாவில் உள்ள தன் தமிழ் காதலியை தேடி வந்தேன் என சொன்னால் இன்னும் மோசமாக தாக்குவார்கள் என அஞ்சிய அந்த இளைஞர் பொதுமக்களின் அடிகளை எல்லாம் வாங்கிக்கொண்டார்.
இறுதியில் காவல்துறையினரிம் தனது நிலையை விளக்கிய போதும் உன்னை விடுதலை செய்தால் பொதுமக்கள் எம்மீது ஆத்திரம் கொள்வார்கள் நீதிமன்றத்தில் நிறுத்துகிறோம் நீதிமன்றம் முடிவெடுக்கப்பட்டும் என காவல்துறையினரும் தெரிவித்து விட்டனர். இந்த இளைஞர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இடம்-வலம் தெரியாத ஊருக்கு தன்காதலியை தேடி வந்ததற்காக அவர் 14 நாட்கள் தற்போது சிறைத்தண்டனை அனுபவிக்கிறார்









0 comments:
கருத்துரையிடுக